''YES, JESSIE IS A BITCH’... கார்த்திக் டயல் செய்த எண், இந்த குறும்படத்தை ஏன் பார்க்கணும் #90’S KIDS?

முகப்பு > சினிமா செய்திகள்

By |

சில படங்கள் திரையை மீறி நம் வாழ்க்கையை, நம் மனதை, நம் நினைவுகளைத் தொட்டுத் தொடரும். மனதின் உள் அடுக்குகளில் ஒளிந்திருந்து அப்படத்தின் காட்சிகள் அல்லது கதாபாத்திரங்கள் தேவையான சமயங்களில் வெளிவரும். அவ்வகையில் 2010-ல் வெளியான விண்ணைத் தாண்டி வருவாயா படத்தை சொல்லலாம்.

இந்தப் படம் வெளியான காலகட்டத்திலும் சரி, இப்போதும் சரி எல்லாருக்கும் பிடித்திருக்கக் காரணம் அதன் அழகான கதை சொல்லலும், ஆழமான காதலும்தான். ஒரு பெண்ணின் மனதை வெல்லவும் தன் கனவினைத் தொடரவும் என வெவ்வேறு திசைகளில் அலைக்கழிக்கப்படும் கார்த்திக்கை, அவனை உயிர் வரைக் காதலித்துப் பின் சூழல் காரணமாக பிரிய நேரிடும் ஜெஸ்சியையும் யாரேனும் மறந்திருக்கக் கூடுமா?

இந்த புள்ளியை நம்பித்தான் கெளதம் வாசுதேவ் மேனன் 2020-ல் ‘கார்த்திக் டயல் செய்த எண்’ என்ற ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். விடிவி ரசிகர்களுக்கு இப்படியொரு பரிசு கிடைக்குமென எதிர்ப்பார்த்திருக்க மாட்டார்கள். எந்தவிதமான ஆர்ப்பட்டமும் இல்லாமல் அமைதியாக ஒரு அலையென இணையத்தை மட்டுமல்லாமல், இதயங்களையும் நனைக்கச் செய்கிறது இந்த குறும்படம். சிம்புவும் த்ரிஷாவும், இல்லை, இல்லை கார்த்திக்கும் ஜெஸ்சியும் இத்தனை வருடங்கள் கழித்து திரும்பி வந்துள்ளனர். கொரோனா லாக்டவுன் சமயத்தில் அவர்களுக்குள் என்ன நிகழ்கிறது. பத்தாண்டுகளான இடைப்பட்ட காலத்தில் அவர்களுடைய வாழ்க்கை என்ன ஆனது? பார்க்கலாம்.

கார்த்திக் (சிம்பு) இப்போது ஒரு சினிமா இயக்குனர். 'உன் காலடித் தடத்தில்’ என்ற படத்துக்கான கதையை தன் லேப்டாப்பில் எழுத ஆரம்பிக்கிறான். ஆனால் சரியான தொடக்கம் அமையவில்லை. ரைட்டர்ஸ் ப்ளாக் என்று சொல்லக் கூடிய மனத்தடை அவனை எழுத விடாமல் அறைக்குள் குறுக்கும் நெடுக்குமாக அலையச் செய்கிறது. என்ன செய்வதென்று திகைக்கிறான். வேறு வழியின்றி, தன் தயக்கத்தை உடைத்து, அந்த எண்ணை அழைக்கிறான். அது வெறும் எண் இல்லை, அவனையே புதுப்பிக்கச் செய்யும் மாயக்காரியின் சொற்கள் அதிலிருந்து வரப்போகிறது என்பது அவனுக்குத் தெரியும்.

மறுமுனையில் ஜெஸ்சி (த்ரிஷா) ஃபோனை எடுத்து ‘ஹலோ’ என்கிறாள். ஒரு நொடி அவன் இதயம் இடம் மாறியது. 2020-லிருந்து பின்னோக்கி 2010-ல் ஜெஸ்சியின் வீட்டை அண்ணாந்து பார்த்தபடி அந்த கேட் அருகே நின்று கொண்டிருக்கிறான் கார்த்திக். காலம் அப்படியே உறைந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும், ஜெஸ்சி எனும் தேவதையை தினமும் பார்ப்பது வரமல்லவா....ஓரிரு நொடிகளில் மீண்டும் தன் இயல்பு நிலைக்கு வந்து ஜெஸ்சியுடனான உரையாடலைத் தொடங்குகிறான் கார்த்திக். ஃபேஸ்புக்கில் அவள் புகைப்படத்தைப் பார்த்ததாக அவன் சொல்ல, இருவரும் வார்த்தைகளாலான அழகான ஒரு உலகுக்குள் போகின்றனர்.

ஆனால் இப்போது ஜெஸ்சி கார்த்திக்கின் காதலி இல்லை. ராய் என்பவரின் மனைவி. இரண்டு குழந்தைகளுக்கு அம்மா. ஜெஸ்சி திருமணமான பெண்களுக்கே உரிய பக்குவத்துடன் அவனுடன் பேசினாலும், பழைய காதலனின் நினைவுகளை விட்டு அகல விரும்பாத இளம் பெண்ணாகவும் அதே நேரத்தில் இருக்க விரும்புகிறாள். தன்னை ஒருவன் காலத்துக்கும் காதலிக்கிறான், தன்னை மட்டுமே நினைத்து உருகுகிறான் என்றால் எந்த பெண்ணுக்குத்தான் கர்வம் இருக்காது. ஜெஸ்சிக்கும் இருந்தது.

அதே சமயத்தில் அவன் வாழ்க்கையில் சாதிக்க வேண்டும், புதிய விஷயங்களை செய்ய வேண்டும் என்று அவனை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசுகிறாள். லாக்டவுனால் முடங்கிப் போயிருக்கும் திரையுலகம் முதல், உடைந்து போன அவன் மனம் வரை பல விஷயங்களை மனம் விட்டுப் பேசுகின்றனர். அவனைப் புதுப் புது விஷயங்களை செய்யும்படி தேற்றுகிறாள் ஜெஸ்சி. ஒரு கட்டத்தில் கார்த்திக் தன் ஆசையை வெளிப்படையாகக் கேட்க, திகைத்துப் போகிறாள் ஜெஸ்சி. அது அவள் எதிர்ப்பார்க்காதது. ஆனால் அதை எளிதாக கையாள்கிறாள். இந்த குறும்படத்தின் ஆகச் சிறந்த வசனங்கள் இவைதான் எனலாம் (வீடியோவில் பார்க்கவும்).

ஃபோனில் பேசிய அந்த 12 நிமிடங்கள் அவனுக்குள் புது உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. கார்த்திக்கின் மனத்தடை உடைத்து புன்னகையுடன் அந்த ஸ்க்ரிப்டை மீண்டும் எழுதத் தொடங்குகிறான். வேகமாக வளர்ந்து வரும் அந்த திரைக்கதையின் கடைசி வரிகள் இவை, ‘சில மனிதர்கள், சில பெண்கள் உங்களை விட்டு ஒருபோதும் விலகிச் செல்வதில்லை. உங்களின் ஒரு பகுதியாக உங்கள் ஆன்மாவாக எப்போதும் இருப்பார்கள். சுபம் என்று முடிக்கிறான். புதிதாக மாறு என்று ஜெஸ்சி சொன்னதை ஏற்று,  அவன் கதை நாயகியின் பெயரான திவ்யாவை காதம்பரியாக மாற்றுகிறான். அந்த படத்தின் பெயரையும் ‘கமல் & காதம்பரி A love story’ என்று மாற்றியிருக்கிறான்.

நினைவுகளில் நீந்தி சிரிக்கும் போதும், போனைப் பார்த்து நக்கலாக எதிர் பேச்சு பேசும் போதும், உள்ளம் நெகிழ்ந்து கண்ணில் நீர் மல்க காதலைக் கோருவதுமென மிகக் குறைந்த நேரத்தில் ஒரு மனதின் போராட்டத்தை நிகழ்த்திக் காட்டுகிறார் சிம்பு. ஒடிசலான அப்பாவியான 23 வயது கார்த்திக் இப்போது 33-வது வயதில் குறுந்தாடி மீசையுடன் வெளித்தோற்றத்தில் இருந்தாலும் உள்ளுக்குள் அதே மென் மனதினன்தான் என்பதை உடல்மொழியில், விழி அசைவில் காண்பிப்பது க்ளாஸிக்.

மறுமுனையில் காவியமாக ஜெஸ்சி. முதல் காதல் என்பது ஆணுக்கு மட்டுமல்ல பெண்களுக்கும் மறக்க முடியாதது. ஆனால் அதை வெளிக்காட்டவோ, வேறொரு வாழ்க்கையில் நிலைத்துவிட்ட பின்னர் திரும்பிப் பார்க்கவோ அவர்களுக்கு நேரமிருப்பதில்லை. அந்தந்த காலகட்டத்தில் அந்தந்த காதலுக்கும் உறவுக்கும் நேர்மையாக இருக்கவே ஜெஸ்சிகள் விரும்புவார்கள். அவ்வகையில் நம் ஜெஸ்சி, தான் செல்லும் திசையெல்லாம் நறுமணத்தை பரப்பிச் செல்லும் பூவைப் போன்றவள். கணவனின் ஒப்புதலுக்கு பின், கார்த்திக்குடன் மீண்டும் பேசத் தொடங்கியிருக்கிறாள். அவளின் குரலும், உடல்மொழியும், கார்த்திக்கை இப்போது அவள் பார்க்கும்விதமும் எல்லாமும் புதுசு. அவ்வகையில் விடிவி 2-வுக்கான மிகச் சிறந்த முன்னோட்டமாக இந்தக் குறும்படம் உள்ளது,

லாக்டவுன் காரணமாக வீடியோ கால் மூலம் கெளதம் மேனன் சொல்லச் சொல்ல அதைக் கேட்டு சிம்புவும் த்ரிஷாவும் நடித்துள்ளனர். ஐபோனில் மிகக் குறைந்த வசதிகளுடன் படமாக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இதற்கு பின்னணியில் உள்ள உழைப்பு மிக அதிகம். இந்த குறும்படத்தின் உயிர்நாடியாக விளங்குவது வசனங்கள் மற்றும் இசை. உன்கிட்ட பேசினா மனசு லைட்டாகுது என்ற நம்பிக்கையும், மணி ரத்னம் தான் ஆப்பு வைச்சாரா என்ற லேசான கோபமும், எல்லாமே சரி ஆகிடும் கார்த்திக்’ என்ற பாசிட்டிவிட்டியும் ரசனையின் உச்சம் எனலாம்.

அது மட்டுமல்லாமல் முதல் காட்சியிலிருந்து இறுதி வரை கோர்வையான படத்தொகுப்பால் ஒருவிதமான பித்தான மனநிலைக்குள் இழுத்துச் செல்லும் மாயத்தன்மையை இதில் உருவாக்கியிருப்பார் ஜிவிஎம். பின்னணியில் சன்னமாக ஒலிக்கும் ஏ ஆர் ரஹ்மானின் இசை தேவையான இடங்களில் இதயத்தை பின்னோக்கியும் (2010) முன்னோக்கியும் (2020) இழுத்துச் சென்றது. அதிலும் 'மன்னிப்பாயா' ட்யூன் ஒலிக்கும் இடங்கள் மற்றும் ஃபோன் உரையாடல் முடிந்து இணைப்பை துண்டித்தாலும், இதயம் அப்படியே இடம்பெயர்ந்து ஒரு நொடி அவர்கள் இருவரும் அதே கார்த்திக்காகவும், அதே ஜெஸ்லியாவும் மிதப்பார்கள்.'ஏன்.. இதயம், உடைத்தாய் நொறுங்கவே' பாடலின் பிஜிஎம் மெலிதாக ஒலிக்க மனதை உருகி வழிந்தோடச் செய்துவிடுகிறார் ரஹ்மான்.

நீங்கள் ‘விண்னைத் தாண்டி வருயாயா’ படத்தின் மிகப் பெரிய ரசிகராக இருந்தால், 'கார்த்திக் டயல் செய்த எண்;  உங்கள் முகத்தில் குறும் புன்னகையையும் அதே சமயத்தில் இதயத்தில் சிறு வலியையும் உணர  வைக்கும் என்பது உறுதி.

தொடர்புடைய செய்திகள்

Karthik Dian Seitha Enn directed by GVM ireminds 90's kids VTV

People looking for online information on GVM, Karthik Dial Seytha Yenn, Simbu, Trisha, VTV will find this news story useful.