துருவங்கள் பதினாறு மூலமாக தமிழ் சினிமாவின் கவனத்தை ஈர்த்த இளம் இயக்குனர் கார்த்திக் நரேன்.
அந்த திரைப்படத்தை தொடர்ந்து அருண் விஜய் நடிப்பில் மாஃபியா படத்தை இயக்கி வெளியிட்ட கார்த்திக் நரேன், நரகாசுரன் படத்தையும் இயக்கியிருந்தார். இப்படி பிசியாக இருக்கும் கார்த்திக் நரேன், தற்போது ரசிகர்களிடையே தன்னிடம் கேள்வி கேட்பதற்கு அனுமதி அளித்ததை அடுத்து ரசிகர்கள் அவருடைய இன்ஸ்டாகிராம் மூலமாக அவரிடம் பல கேள்விகளை கேட்டுள்ளனர்.
அவை குறும்புத்தனமாகவும் சுவாரஸ்யமாகவும் இருக்கின்றன. அதில் ரசிகர்கள், “இவ்வளவு ஹேண்ட்சமான இளம் இயக்குநராக கோலிவுட்டில் இருப்பது பற்றி ஏதேனும் நினைத்ததுண்டா?”, “வலிமை அப்டேட் கொடுங்கள்”, “கிறிஸ்டோபர் நோலனுடன் இணைந்து டெனட்-2 திரைப்படத்தை இயக்குவீர்களா?”,
“நரகாசுரன் படம் இருக்கா? இல்லையா? வருமா? வராதா?”, “நரகாசுரன் படத்திலிருந்து ஒரு காட்சியை லீக் பண்ண முடியுமா?” என்றெல்லாம் பல கேள்விகளைக் கேட்டு இருக்கின்றனர்.
இவை அனைத்துக்கும் வடிவேல் மட்டும் கவுண்டமணி நடித்த பிரபல காமெடி காட்சிகளின் டெம்ப்ளேட்டுகளை எடுத்து பதிலாகத் தந்திருக்கிறார் கார்த்திக் நரேன். குறிப்பாக நடிகர் மகேந்திரன், “எப்போது தனுஷின் D43 படத்தை எடுப்பீர்கள் நான் வந்து இணையலாம்?” என்று கேட்டதற்கு, “மிக விரைவில் அண்ணா” என்று கார்த்திக் நரேன் பதிலளித்திருக்கிறார்.