ரெமோ படத்தை எடுத்த பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி, ரஷ்மிகா மந்தன்னா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் சுல்தான். இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தற்போது நிகழ்ந்துள்ளது.
இந்த விழாவில் பேசிய கார்த்தி, “வயது வித்தியாசம் இல்லாமல், ஜாதி மத பேதமில்லாமல் அத்தனை பேரும் சேர்ந்து உருவாக்கும் ஒரு விஷயம் சினிமா. இந்த படத்தின் ஒன்லைன் எனக்கு பிடித்திருந்தது. வன்முறையே ஆகாத ஒருவனிடம் 100 ரவுடிகளை மேனேஜ் பண்ணும் பொறுப்பை கொடுத்தால் என்ன ஆகும்? அவன் எப்படி அதை எதிர்கொள்வான் என்பதுதான் எனக்கு இந்த கதையில் பிடிப்பு வர காரணம்.
ஏனென்றால் தலைமைப்பொறுப்பை ஈஸியாக எடுத்துக்கொள்ள முடியாது. அதையே யாரும் ஏற்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் அதை நாம் பார்த்துள்ளோம். ஆக, ஒரு புது தலைமை வரும்போது என்னென்ன சவால்கள் இருக்கும், அதற்குள் இருக்கும் நகைச்சுவை, உணர்வுகள், வெவ்வேறு இலக்குகள் கொண்ட அதிக கதாபாத்திரங்கள் என பெரிய படம் இது. 20 நிமிடம் கதை கேட்டதுமே இந்த கதை பிடித்தது. பாக்யராஜ் கதை சொல்லும்போதே இம்ப்ரஸ் செய்துவிட்டார்.
ஒரு பட விழாவில் சத்யராஜ் சார் சொன்னார். ஒரு படத்தை கெடுப்பதற்கு ஒவ்வொரு தருணத்திலும் ஒரு முயற்சி நடந்துகொண்டே இருக்கும். ஆனாலும் கெட்டுப்போகாமல் படத்தை கொண்டுவந்து சேர்ப்பதுதான் பெரிய விஷயம். இந்த படத்தின் கதாபாத்திர தேர்வினை இயக்குநர் கச்சிதமாக செய்திருக்கிறார்.
இந்த படத்தில் யோகி பாபுவுடன் முதல் முறையாக நடிக்கிறேன். அவர் நடிப்பை பார்த்து விழுந்து விழுந்து சிரித்துள்ளேன். ஆனால் அவர் மிகப்பெரிய புத்திசாலி, அவர் லொள்ளு சபாவில் சந்தானத்துடன் ஸ்கிரிப்ட் பணிகளை செய்துள்ளார். பிரமதமாக ஃபுட் பால் விளையாடுகிறார். எல்லாத்துக்கும் கவுண்ட்டர் வெச்சிருப்பார்.
இந்த படத்தின் பாடல்கள் நான் போரடிக்காமல் கேட்டுக்கொண்டிருந்தேன். குறிப்பாக எப்படி இருந்த நாங்க பாடல். சும்மா நின்றுகொண்டிருண்ட ஜிம் பாய்ஸை நடிக்க வைத்துள்ளார். செண்ட்ராயன் அருமையாக நடிக்கிறார். இத்தனை விதமான கேரக்டர்களை பார்த்ததும் எனக்கு திருவிளையாடல் படம் பார்ப்பது போல் இருந்தது.
ரஷ்மிகா ஒரு பெரிய க்ரஷ். ஷூட்டிங்கில் கேமராவுக்கு பின்னால் நின்று அவ்வளவு அலப்பறை செய்வார். இதுவரை கண்ணிலே மிரட்டி நடித்துக் கொண்டிருந்த ரஷ்மிகாவை முதல் முறை இப்படத்தில் கிராமத்து கதையில் சேற்றில் இறங்க வைத்து, டிராக்டர் ஓட்ட வைத்து, மாட்டுக்கு பால் கறக்க வைத்து என அவர் என்னெல்லாம் ஆசைப்பட்டாரோ அதையெல்லாம் நடித்துவிட்டார்.” என்று பேசினார். சுல்தான் படம் ஏப்ரல் 2-ஆம் தேதி வெளியாகிறது.