கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, பொன்னியின் செல்வன் பற்றி பேசுகையில், "இந்த படம் சினிமாவின் 70 வருஷ கனவு. இந்த படத்திற்கு பிறகு, எங்கள் அடையாளமே மாறும். வரலாற்று புனைக் கதையான பொன்னியின் செல்வன் எழுதிய கல்கி அவர்களுக்கு என்னுடைய நன்றி. மணி சாரோட 40 வருஷ கனவு இந்த படம். 1989- ல் கமல் சார் எடுக்க முயற்சி செய்தார். பொன்னியின் செல்வன் திரைப்படம் அவ்வளவு எளிதில் நடந்து விடவில்லை. ஷூட்டிங் சென்றோம். இடையில் நின்றது. இவ்ளோ பெரிய படம் எடுத்து முடித்த மணி சாருக்கு நன்றி. இந்த தலைமுறையில் பிறந்ததற்கு சந்தோஷப்படுகிறேன்.
கமல் சார் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரத்தில் நான் நடித்து இருக்கிறேன். நினைத்தாலே பயமாகதான் இருக்கிறது. ஜெயராம் சாருடன் தான் நிறைய நேரம் செலவழித்தேன். அவர் படம் முழுவதும் ஒரு அடி வளைந்து நடித்துள்ளார். (கதையில் வரும் நம்பி உயரம் குறைவாக இருப்பார் என்பதால் அதனை ஈடுகட்டுவதற்காக அப்படி நடித்தார்)" என்றார்.
தொடர்ந்து, விக்ரம் பற்றி பேசிய கார்த்தி, "நிறைய முறை அவரை பார்த்து ரசித்து இருக்கிறேன். அவரை அருகில் பார்க்கும் போது மிக்க மகிழ்ச்சி. அவர் கண் கொண்டு நடிக்கும் போது, நம்மை மெய் மறக்க வைக்கும்" என்றார். இறுதியில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பற்றி பேசிய கார்த்தி, "நீங்கள் பொன்னியின் செல்வன் கதையை நிறைய இடத்தில் பேசியது மிகவும் இன்ஸ்பயரிங்காக இருந்தது. மிக்க நன்றி சார்" என்றார்.