நடிகர் கார்த்தி & ராஜூ முருகன் இணையும் ஜப்பான் படத்தின் முதல் லுக் போஸ்டர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
'விருமன்' 'பொன்னியின் செல்வன்', 'சர்தார்' படங்களின் வெற்றிக்கு பிறகு கார்த்தி நடிக்கும் புதிய திரைப்படம் ஜப்பான். இந்த படத்தினை இயக்குனர் ராஜூ முருகன் இயக்க உள்ளார்.
எழுத்தாளரும், இயக்குனருமான ராஜூ முருகன் கடந்த 2014 ஆம் ஆண்டு 'குக்கூ' படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். இதனை தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய இரண்டாவது படம் ஜோக்கர். இது சமூகத்தை கேள்வி கேட்கும் நாயகனின் கதையை அடிப்படையாகக் கொண்டு தேசிய விருதை வென்றது. இந்தப் படம் பெரும்பான்மையான மக்களால் பாராட்டப்பட்டது. கடைசியாக 'ஜிப்சி' படத்தை ராஜூ முருகன் இயக்கினார்.
'சகுனி', 'காஷ்மோரா', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'கைதி', 'சுல்தான்' என 5 திரைப்படங்களைத் தொடர்ந்து 6-வது முறையாக ’ஜப்பான்’ திரைப்படம் மூலம் ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்தி மீண்டும் நடிக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படம் நடிகர் கார்த்தியின் 25வது படமாக உருவாக உள்ளது.
மாநகரம், கைதி, டாணாக்காரன், விக்ரம் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் ஃபிலோமின் ராஜ் படத்தொகுப்புப் பொறுப்பினை ஏற்றுள்ளார். தேசிய விருது வென்ற வினீஷ் மங்கலான் இந்தப் படத்தின் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணிபுரியவுள்ளார். கார்த்தியுடன் பொன்னியின் செல்வன், காற்று வெளியிடை படங்களில் பணிபுரிந்த ஒளிப்பதிவாளர் ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்கிறார். 2020ஆம் ஆண்டின் சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை வென்ற ஜிவி பிரகாஷ் குமார் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.
தெலுங்கு நடிகர் சுனில், 'ஜப்பான்' திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். ஒளிப்பதிவாளர் & இயக்குனரான விஜய் மில்டன், 'ஜப்பான்' திரைப்படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
இந்த படத்தில் நடிகர் கார்த்திக்கு ஜோடியாக பிரபல நடிகை அனு இம்மானுவேல் முதல் முறையாக இப்படத்தில் நடிக்கவுள்ளார். இவர் ஏற்கனவே சிவகார்த்திகேயன் நடித்த "நம்ம வீட்டு பிள்ளை", விஷால் நடித்த "துப்பறிவாளன்" ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த ஜப்பான் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு விரைவில் தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற உள்ளது என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் வரும் திங்கட்கிழமை வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை பிரபல டிசைனர் டியூனி ஜான் வடிவமைத்துள்ளார். இது டைட்டில் லுக் போஸ்டரில் அதிகாரப்பூர்வமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தங்க சங்கிலியில் ரூபாய் குறியீடு டாலர் அணிந்த மார்பு டைட்டில் லுக் போஸ்டரில் அமைந்துள்ளது.