அமரர் கல்கியின் பகழ் பெற்ற “பொன்னியின் செல்வன்” நாவலை அடிப்படையாகக் கொண்டு, இந்தியாவின் மிக முக்கிய டைரக்டர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார்.
Also Read | ‘பழுவேட்டரையர் - நந்தினி காதல்’.. ‘நந்தினி அழகை போற்றும் வந்தியத்தேவன்’ .. PS1 கேரக்டர் பின்னணி
சோழப் பேரரசின் அரியணைக்கு வரும் தொடர் ஆபத்துகளும், வீரர்களுக்கும் சதிகாரர்களுக்கும் இடையில் நிகழும் போராட்டங்களும், சாதனைகளும், நகைச்சுவையும், தியாகங்களும் கொண்ட விறுவிறுப்பான கதையான “பொன்னியின் செல்வன்” கதையை திரையில் காண பல கோடி ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த படத்தின் எடிட்டிங்கை ஸ்ரீகர் பிரசாத் கவனித்து வருகிறார், கலை இயக்குனராக தோட்டா தரணி பணிபுரிந்துள்ளார். ரவி வர்மன் ISC இப்படத்திற்கான ஒளிப்பதிவை செய்துள்ளார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிகர் விக்ரமும், வந்தியத்தேவனாக நடிகர் கார்த்தியும், அருண்மொழிவர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். மேலும் இப்படத்தின் புகழ்பெற்ற பெண் கதாபாத்திரங்களான நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர். பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் வேடத்தில் முறையே சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடிக்கின்றனர். சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லெஷ்மியும், வானதி கதாபாத்திரத்தில் நடிகை சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர்.
இந்நிலையில் கார்த்தி மற்றும் ஐஸ்வர்யா லெஷ்மி இடம்பெறும் ஒரு படகு சவாரி டெம்ப்ளேட்டை வைத்து, சமுத்திரகுமாரி பூங்குழலி கேரக்டர் குறித்தும், பூங்குழலி - வந்தியத்தேவன் இருவருக்கும் இடையிலான உரையாடல் குறித்தும் வாசகர்கள் சுவாரஸ்யமாக பேசிவருகின்றனர். கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலில், “அவள் பூங்குழலி. கடல் அலைகள் கரையில் ஒதுக்கும் சங்குகள், சிப்பிகள் முதலியவற்றை ஆதாரமாக்கி அவள் அணிந்துகொண்டிருந்தாள். ஆனால் இவையெல்லாம் அவளுடைய மேனியில் பட்டதனால் தாங்களும் அழகு பெற்றனவேயன்றி, அவளை அலங்கரித்ததாகச் சொல்ல முடியாது. அழகே ஒரு வடிவம் தாங்கி வந்தால், அதற்கு எந்த ஆபரணத்தைக் கொண்டு அழகு செய்யமுடியும்?” என்று வர்ணித்திருப்பார்.
அப்படி ஒருமுறை கோடிக்கரையில் இருந்து படகில் இலங்கைக்கு பயணித்து கொண்டிருக்கும்போது, பூங்குழலியிடம் வந்தியதேவன் "பாய்மரம் கட்ட வேண்டாமா?" என்று கேட்கிறான. அதற்கு பூங்குழலி, "பாய்மரம் கட்டினால் கரையில் உள்ளவர்கள் ஒருவேளை நம்மைப் பார்த்துவிடுவார்கள். ஓடிவந்து பிடித்துவிடுவார்கள்" என்று சொல்ல, வந்தியத்தேவனோ "இனி அவர்கள் வந்தால் ஒருகை பார்த்துவிடுகிறேன், நீ கொஞ்சமும் பயப்பட வேண்டாம்" என்கிறான்.
ஆனால், பூங்குழலியோ, “இப்போது எதிர்க்காற்று அடிக்கிறது. பாய்மரம் விரித்தால் படகை மறுபடி கரையிலே கொண்டுபோய் மோதும். நடுநிசிக்குமேல் காற்று திரும்பக்கூடும். அப்போது பாய்மரம் விரித்தால் பயன்படும்" என்று சொல்ல, இதை கேட்டு புல்லரிக்கும் வந்தியத்தேவன் பூங்குழலியை புகழ, அவளது தந்தையென தியாகவிடங்கக் கரையரைச் சொல்லி பாராட்டுகிறான். ஆனால் பூங்குழலி கொடுக்கும் பதிலோ, "கரையில் இருக்கும்போதுதான் அவர் என்னுடைய தந்தை; கடலில் இறங்கிவிட்டால்.. சமுத்திரராஜன்தான் என் தகப்பனார். என்னுடைய இன்னொரு பெயர் சமுத்திர குமாரி. சக்கரவர்த்தியின் இளையகுமாரரை, பொன்னியின் செல்வன் என்று சிலர் சொல்கிறார்கள் அல்லவா, அது போலத்தான்” என்று கூறுகிறாள். இந்த டெம்ப்ளேட்டை வைத்து வாசகர்கள் பலரும் நாவலில் வரும் இந்த காட்சியை நினைவுபடுத்திக்கொண்டு பகிர்ந்துவருகின்றனர்.
லைகா தயாரித்திருக்கும் இத்திரைப்படம் 2 பாகங்களாக பிரம்மாண்டமாக உருவாகி இருக்கிறது. இதில் முதல் பாகமான “பொன்னியின் செல்வன் -1” வரும் 2022 செப்டம்பர் 30-ஆம் தேதி திரைக்கு வருகிறது.
Also Read | PS1 : ஒரே Frame-ல ஆதித்ய கரிகாலன்.. வந்தியத்தேவன்.. அருண் மொழிவர்மன்..? .. நாவல்ல அப்படி வராதா?