நடிகர் சிவகுமாரின் இளைய மகனும், நடிகர் சூர்யாவின் தம்பியுமானவர் கார்த்தி. அமெரிக்காவில் திரைத்துறை தொடர்பாக படித்த கார்த்தி இயக்குநர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணியாற்றினார். பின்னர் பருத்தி வீரன் படத்தில் இருந்து ஹீரோவாக நடிக்கத் தொடங்கினார்.
தற்போது தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் கார்த்தி அவ்வபோது சமூகம், விவசாயம் என குரல் கொடுப்பதும் உண்டு. இவருக்கு பல ரசிகர்கள் பட்டாளமே உள்ளனர். கார்த்திக்கு கடந்த 2011-ம் ஆண்டு திருமணம் ரஞ்சனி என்பவருடன் கோவை கொடிசியாவில் திருமணம் நடந்தது. பின்னர் 2013-ம் ஆண்டு இத்தம்பதிக்கு உமையாள் என்கிற பெண்குழந்தை பிறந்தது. பின்னர் 7 வருடம் கழித்து அண்மையில் கார்த்திக்கு இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த நேரத்தில் பலரும் கார்த்திக்கு வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
இந்நிலையில் நடிகர் கார்த்தி, இந்த சந்தோஷத்தை பகிரும் வகையில், “கண்ணா, அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக ‘கந்தன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும். அன்புடன்... அப்பா!” என்று தமது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அவருக்கு திரையுலகினர் வாழ்த்து சொல்லிவருவதோடு, இத்தனை அழகான தமிழ் பெயரை சூட்டியதற்கு பாராட்டியும் வருகின்றனர்.
தற்போது‘சுல்தான்’,‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் கார்த்தி நடித்துவருகிறார்.