பதான் படம் குறித்து நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
பான் இந்திய படமாக இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் கடந்த ஜனவரி 25ம் தேதி திரையரங்குகளில் பதான் படம் வெளியாகி உள்ளது. 5 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் பிரதான கதாபாத்திரம் ஏற்று நடித்த படமாக பதான் அமைந்துள்ளது.
பதான் படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை தீபிகா படுகோனே நடித்துள்ளார். மேலும் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.
பழம்பெரும் யாஷ் ராஜ் நிறுவனத்தின் 50வது படமான பதான் படம் IMAX வடிவத்திலும் ரிலீஸ் ஆகி உள்ளது. யாஷ் ராஜ் பிலிம்ஸின் Spy Universe படங்களில் நான்காவது படமாக பதான் படம் வெளியாகி உள்ளது. முன்னதாக சல்மான் கான் ஏக் தா டைகர் (2012), டைகர் ஜிந்தா ஹே (2017) , ஹிருத்திக் ரோஷன் நடிப்பில் வார் (2019) திரைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இந்தியில் ஹிர்திக் ரோஷன் நடிப்பில் வெளியாகி ப்ளாக்பஸ்டர் ஆன 'வார்' படத்தின் இயக்குனர் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் 'பதான்' படம் உருவாகி உள்ளது.
முன்னாள் ரா உளவு அமைப்பில் இருந்த ஜான் ஆபிரகாம் தேசத்திற்கு துரோகம் செய்யும் வகையில் அவரும் & அவரது குழுவினரும் இந்திய விஞ்ஞானி ஒருவரை குழு கடத்துகின்றனர். மேலும் சின்னம்மை நோயை இந்தியாவில் பரப்ப திட்டமிடுகிறார். இந்த சதியை ஷாருக்கான் எப்படி முறியடிக்கிறார் என்பதே பதான் படத்தின் கதைக்கரு.
இந்த படம் குறித்து கங்கனா ரனாவத் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், "பதான் திரைப்படம், 'வெறுப்பை வீழ்த்தி அன்புக்கு கிடைத்த வெற்றி' என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதேவேளையில் யாருடைய வெறுப்பின் மேல் யாருடைய அன்பு வெற்றி பெற்றது? என்ற கேள்வி எழுகிறது.
பதான் படத்தின் டிக்கெட்டுகளை வாங்கி பதான் படத்தை வெற்றி பெறச் செய்தது யார்? ஆம், அனைவரையும் உள்ளடக்கிய 80 சதவீத இந்துக்கள் வாழும் இந்தியாவின் அன்பான மக்கள் தான் படத்தை வெற்றி பெற செய்துள்ளனர்.
ஆனால் பதான் திரைப்படம் நமது எதிரி நாடான பாகிஸ்தானையும், ISI -யும் நல்லவர்களாக காட்டுகிறது. வெறுப்புக்கு அப்பாற்பட்ட இந்தியாவின் இந்த மனப்பான்மை தான் இதை சிறப்பாக்குகிறது. வெறுப்பையும், கீழ்மையான அரசியலையும் வென்றது இந்தியாவின் அன்பு தான். பதான் நல்ல திரைப்படமாக இருக்கலாம். ஜெய் ஸ்ரீ ராம் மட்டுமே இங்கு எதிரொலிக்கும்.
இந்தியாவில் உள்ள முஸ்லிம்கள் தேசபக்தர்கள். அவர்கள் ஆப்கானிஸ்தான் பதான்களிடமிருந்து மிகவும் வேறுபட்டவர்கள் என்று நான் நினைக்கிறேன்.
இந்தியா ஒருபோதும் ஆப்கானிஸ்தானாக இருக்காது. ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பது நம் எல்லாருக்கும் தெரியும். பதான் திரைப்படத்தின் கதைக்கு 'இந்தியன் பதான்' என்பதே பொருத்தமான பெயர்." என நடிகை கங்கனா ரனாவத் பதிவிட்டுள்ளார்.