இயக்குனர் ராதா கிருஷ்ணாவுடன் இணைந்து மணிகர்ணிகா படத்தை இயக்கி நடித்தார் கங்கனா ரனாவத்.
அதனைத் தொடர்ந்து சர்ச்சைக்குரிய ராமர் கோயில் வழக்கை படமாக எடுக்கவிருக்கிறார் கங்கனா ரனாவத். இப்படத்துக்கு அபரஜிதா அயோத்யா என்று பெயரிடப்பட்டுள்ளது. பாகுபலி, மணிகர்ணிகா படங்களுக்கு கதாசிரியரான விஜயேந்திர பிரசாத் இந்தப் படத்துக்கும் எழுதியுள்ளார்.
2019 நவம்பரில் அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததைத் தொடர்ந்து, ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா என்ற அறக்கட்டளையை அமைத்தது மத்திய அரசு. ராமர் கோயில் கட்டுவதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கின. லாக்டவுன் காரணமாக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்பட்ட சில நாட்களிலேயா, கங்கனா இது குறித்து ஒரு படம் எடுப்பேன் என்று அறிவித்திருந்தார், ஆனால் அந்த நேரத்தில், அப்படத்தை தயாரிப்பேன் என்றுதான் கூறியிருந்தார்.
இது குறித்து சமீபத்தில் ஒரு பேட்டியில் கங்கனா கூறியது, ‘இந்தப் படத்தை முதலில் நான் இயக்குவதாக இல்லை. தயாரிக்க மட்டுமே நினைத்தேன். ஏற்கனவே சில படங்களில் நடித்துக் கொண்டிருந்ததால், ஒரு படத்தை இயக்குவதைப் பற்றி யோசிக்க கூட இல்லை. வெறொரு இயக்குனரை அணுக முடிவு செய்திருந்தேன்.
மணிகர்ணிகா படத்தில் இணை இயக்குனராக இருந்த காரணத்தாலும், இந்தப் படமும் வரலாற்றுப் பின்னணியில் அமைந்துள்ளதாலும் அபரஜிதா அயோத்யா படத்தை என்னை இயக்கச் சொன்னார்கள். எனக்கும் அது சரியென்று பட்டதால் உடனே சம்மதித்தேன். ஆனால் இந்தப் படத்தில் நான் நடிக்கவில்லை. இயக்குவதில் கவனம் சிதறிவிடாமல் இருக்க இந்த முடிவு. என்னைப் பொறுத்தவரை இது ஒரு சர்ச்சைக்குரிய படம் அல்ல. இதை நான் அன்பு, நம்பிக்கை மற்றும் ஒற்றுமையின் கதையாகவே பார்க்கிறேன், எல்லாவற்றிற்கும் மேலாக இது தெய்வீகத்தின் கதை," என்று கூறினார்.
கடைசியாக ‘பங்கா’ என்ற படத்தில் நடித்த கங்கனா, தற்போது ‘தலைவி’ மற்றும் ‘தகாத்’ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.