கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து முக்கிய நபர்களின் ராஜினாமாவால் பரபரப்பு!

முகப்பு > சினிமா செய்திகள்

By |

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. இந்த வாக்குப்பதிவைத் தொடர்ந்து மே 2-ஆம் தேதி, வாக்கு எண்ணிக்கை நடந்தது.

இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் திமுக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. ஸ்டாலின் முதல்வராகிறார். இவ்வாறாக நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. 

இதனிடையே மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு இறுதிவரை முன்னிலையில் இருந்து, இறுதியில் தோல்வியை தழுவினார். இந்நிலையில், மநீம கட்சியில் இருந்து முக்கிய நிர்வாகிகள் சிலர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ள விவகாரம் அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

குறிப்பாக இந்த கட்சியில் இருந்து துணைத்தலைவர் மகேந்திரன், சந்தோஷ் பாபு, சி.கே.குமரவேல், மவுரியா, முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி ராஜினாமா செய்துள்ளனர். முன்னதாக, கமீலா நாசர் ராஜினாமா செயதிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் மகேந்திரன் தமது அறிக்கையில், “மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத்தலைவர் டாக்டர்.ஆர்.மகேந்திரன் ஆகிய நான் கனத்த இதயத்துடனும் தெளிவான சிந்தனையுடன் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்வது, நான் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து உடனடியாக இன்றிலிருந்து விலகுகிறேன். இப்படிப்பட்ட ஒரு கடினமான முடிவினை நான் இன்று எடுப்பதற்கான காரணத்தை மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர் அனைவருக்கும் தெரிவிப்பது எனது முக்கியமான கடமையும் பொறுப்பும் ஆகும். நான் ஏன் இப்பொழுது கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதற்கான விரிவான காரணத்தையும் அனைவரிடமும் ஒரு முழு விளக்க கடிதத்தில் எழுதி இணைத்துள்ளேன்.

மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவது என்கின்ற கடினமான முடிவினை மிகக்கவனமாக எடுத்திருக்கிறேன். கட்சியின் இத்தனை பெரிய தோல்விக்கு பிறகும் தனது தோல்விக்குப் பின்னரும் தலைவர் அவர்கள் தனது அணுகுமுறையில் இருந்து மாறுபட்டு செயல்படுவதாக எனக்கு தெரியவில்லை, மாறி விடுவார் என்கிற நம்பிக்கையும் இல்லை. எனக்கு தெரிந்த தலைவர் திரு.கமலஹாசன் எளிய தொண்டர்களுக்கு தோழனாகவும் அனைத்து நல்ல தலைமைப் பண்புகளும் கொண்ட நல்லவராகவும் மறுபடியும் செயல்பட வேண்டும் என்று வெளியே இருந்து வாழ்த்துகின்றேன்.

தலைவர் கமலஹாசன் அவர்களால் தான் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்தேன்.  மக்கள் நீதி மையம் கட்சியின் பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் உற்சாகமும் உத்வேகமும் தான் என்னை இந்த இரண்டரை ஆண்டுகளில் இரண்டு முக்கியமான தேர்தல்களை சந்திப்பதற்கான வலிமையை கொடுத்தது. அதற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். அரசியல் என்னும் விதையை எனக்குள் விதைத்த தலைவர் கமலஹாசன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள். மக்கள் சேவையை எங்கிருந்து செய்தாலும் காந்தியார் சொன்னது போல் நீங்கள் பார்க்க விரும்பும் மாற்றமாக நீங்கள் இருங்கள் என்பதற்கேற்ப சிறப்பாகவும் ஆழத்துடனும் செயல்படுவேன் என்ற உறுதியுடன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விடை பெறுகிறேன்”  என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய இணைப்புகள்

Kamalhassan important Makkal Neethi Maiam party members resigned

People looking for online information on Kamal Haasan, Makkal Neethi Maiam will find this news story useful.