தமிழில் தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஆறாவது சீசனில் கடந்த சில தினங்கள் முழுக்க முழுக்க கலவரமாக சென்றது என்று தான் சொல்ல வேண்டும்.
பொம்மை டாஸ்க் என்ற ஒன்றின் காரணமாக, முழுக்க முழுக்க சண்டைகளும் சச்சரவுகளும் தான் அங்கே அரங்கேறி இருந்தது.
அணியாக பிரிந்து பொம்மை டாஸ்க் ஆடிக் கொண்டிருந்த சமயத்தில், போட்டியாளர் ஷெரின் நெரிசலில் சிக்கி கீழே விழுந்து காயமும் அடைந்ததாக தெரிகிறது.
அப்போதிலிருந்து பிக்பாஸ் வீடு சூடு பிடிக்க ஆரம்பித்திருந்த நிலையில், ஒரு சாரார் தனலட்சுமி தான் ஷெரினாவை தள்ளி விட்டார் என்றும், மற்ற சிலர், தனலட்சுமி அதற்கு காரணமில்லை என்றும் வாதாடி வந்தனர். இப்படியாக கலவர பூமியாக பிக்பாஸ் நிகழ்ச்சி சென்று கொண்டிருக்க, பொம்மை டாஸ்க் முடிவடைந்த பின்னர், ஓரளவுக்கு கலகலப்பாகவும் பிக்பாஸ் வீடு மாறி இருந்தது.
இதற்கு மத்தியில், பேய் பிராங்க் என்ற பெயரில் தனலட்சுமி, ஷிவின் உள்ளிட்ட பலரை அமுதவாணன் பயமுறுத்தி இருந்தார். இதில், தனலட்சுமி அழுத படி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற போனது கடும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
அமுதவாணன் செய்த கோஸ்ட் பிராங்க் படம் குறித்து பேசி இருந்த கமல்ஹாசன், "பிராங்கில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் பார்ப்பவர்களை நம்பவைக்கக் கூடிய வகையில் இருப்பது தான்" என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்காக சத்யா படத்தின் சூட்டிங் சமயத்தில் நடந்த சம்பவம் ஒன்றை குறித்தும் கமல் பேசி இருந்தார். இது தொடர்பாக பேசிய கமல், "பொதுமக்கள் கூடியிருக்கும் பஜார் ஒன்றில் சத்யா ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அங்கே இருக்கும் நபர்கள் மத்தியில் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டும் என்றும் படக்குழுவினர் திட்டமிட்டிருந்தோம். அதன்படி நிஜ உருட்டு கட்டை ஒன்றையும் போலி உருட்டுக் கட்டை ஒன்றையும் தயார் செய்து வைத்திருந்தோம். மேலும் கார் கண்ணாடிகளை உடைப்பதற்கு நிஜ கட்டையையும், ஆட்களை அடிக்கும் போது டூப்ளிகேட் கட்டை கொண்டும் அடித்தேன்.
மேலும் இதனை சுற்றியிருந்து வேடிக்கை பார்ப்பவர்கள் அனைவரும் கண்ணாடியை உடைக்கும் அதே கட்டையை கொண்டு ஆளையும் அடிக்கிறாரே என்றும் பயத்தில் மிரண்டு பார்க்கின்றனர். ஆனால் நிஜத்தில் இரண்டு உருட்டு கட்டைகளை மாற்றி மாற்றி தான் பயன்படுத்தினேன் என்பது அங்கே யாருக்கும் தெரியவில்லை.
முன்னதாக போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் இதை சொல்லி, இதற்கான அனுமதியைப் பெற்று ஷூட்டிங் செய்தோம். ஆனால் விஷயம் தெரியாமல் புதிதாக வந்த போலீஸ் ஒருவர், என்னை பிடித்து விட்டார்" என சிரித்தபடி கமல் சுவாரஸ்யமாக குறிப்பிட்டார்.