திருப்பூர், உடுமலையை அடுத்த குமரலிங்கத்தைச் சேர்ந்த சங்கரும், திண்டுக்கல் மாவட்டம் பழநியைச் சேர்ந்த கவுசல்யாவும் கடந்த 2015-ஆம் ஆண்டு சாதிமறுப்பு திருமணம் செய்து கொண்டனர்.
அதன் பின்னர் கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 13-ஆம் தேதி, தன் மனைவியுடன் கடைக்குச் சென்ற சங்கர், பட்டப்பகலில் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அதன் பின்னர் இவ்வழக்கில், கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்ளிட்ட 3 பேரை விடுதலை செய்தும், அதே சமயம் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு தூக்கு தண்டனையும் விதித்து திருப்பூர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
இந்நிலையில், உடுமலைப் பேட்டையில் கொலை செய்யப்பட்ட பொறியாளர் சங்கர் வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமியை விடுதலை செய்தும், இவ்வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்ற 5 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததும் சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (ஜூன் 22) தீர்ப்பளித்துள்ளது.
விடுவிக்கப்பட்டவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் உறுதிப்படுத்தப்படாததாலேயே அவர்கள் விடுவிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அரசுத் தரப்பின் கூடுதல் வழக்கறிஞர் எமிலியாஸ், இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என தெரிவித்தார். இந்த விடுதலையை எதிர்த்து காவல்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கமல்ஹாசன் தனது ட்விட்டர் பதிவில், 'ஆணவக் கொலைகள் நம் சமுதாயத்தில் புரையோடியிருக்கும் நச்சுக்களின் அடையாளம். குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவது அரசின் கடமை. தமிழ்நாட்டையே உலுக்கிய கொலையில் A1 குற்றவாளி மீதான குற்றத்தைக் கூட நிரூபிக்க முடியவில்லை என்பது யார் தவறு?' எனப் பதிவிட்டுள்ளார்