விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில், வார இறுதியில் வருகை தரும் நடிகர் கமல்ஹாசன், போட்டியாளர்கள் செய்தவை, பேசியவை, ஒருவருக்கு மற்றவர் மீதான விமர்சனம், புகார் என அனைத்தையும் பற்றி பேசி அலசி மதிப்பாய் செய்வார். அதுபற்றிய அறிவுரையையும் அவர் வழங்குவார்.
அந்த வகையில் சாப்பிட உட்கார்ந்தவர்களிடம் பிரியங்கா என்ன சொன்னார் என பிரியங்காவை கேட்டபோது, “இல்ல சார், சாப்பிடும் முன் அனைவருக்கும் உணவு பத்துதா என பார்க்காமல் சிலர் சாப்பிடுகின்றனர். எனவே மற்றர்களுக்கும் உணவு இருக்கிறதா? என்று பார்க்கச் சொல்லி சொன்னேன்!.. வேறு நோக்கம் இல்லை சார்!” என்று கூறினார். ஆனால் பிரியங்கா அதை சாப்பிட தொடங்கும்போதும், மறுமுறை சாப்பாடு போட்டுக்கொள்ள செல்லும்போது சொன்னதால் சாப்பிடாமல் எழுந்துவிட்டதாக சிபி உள்ளிட்டோர் கமலிடம் கூறினர்.
இந்நிலையில் இதுகுறித்து பிரியங்காவுக்கு அட்வைஸ் பண்ணிய நடிகர் கமல்ஹாசன், “சாப்பிடுவதற்கு முன்பு, அமைதியாக அமர்ந்திருப்பார்கள். அப்போது என்ன சொன்னாலும் கேட்டுக்கொள்வார்கள். சாப்பிட்டு முடிந்த பின்பு, உண்ட மயக்கத்தில் இருக்கும்போது கூட நாம் சொல்லும்போது, இன்னும் நன்றாகவே கேட்டுக்கொள்வார்கள்.
அப்போது சொல்லும்போது, அவர்களுக்கு பசி இருக்காது, முழுமையாக சாப்பிட்டு முடித்துவிடுவார்கள். அதனால் முழுமையாக கேட்கும் மனநிலையில் இருப்பார்கள். அப்போது கூட சொல்லலாம், அடுத்த முறை கவனமாக இருக்க வெண்டும், அடடா.. என அதை உணர்வார்கள். எனினும் அது, சாப்பிட்டு முடித்தவரை நாம் அவமரியாதை செய்தலாகாது!” என்று குறிப்பிட்டார்.
மேலும் பேசியவர், “ஆனால் நாம் சாப்பிட்டுக் கொண்டு இருப்பவர்களிடமோ அல்லது, சாப்பிடுவதற்காக சாப்பாட்டில் கைவைத்து சாப்பிடத் தொடங்குபவர்களிடமோ, சாப்பாடு குறைவாக இருக்கிறது, எல்லாருக்கும் இருக்குமா என தெரியவில்லை, பார்த்து சாப்பிடுங்கள் என சொன்னால், அதன் பிறகு அவர்களுக்கு சாப்பிடும் எண்ணமே வராது.! அதை சாபாட்டில் கைவைத்த பின் சொல்லக் கூடாது என்பதுதான் அதில் இருக்கும் விஷயம்” என விளக்கினார்.
இதற்கு, தன் வாழ்வில் நடந்த ஒரு உதாரணத்தையும் கமல் குறிப்பிட்டிருந்தார், அதில், “ஒரு எம்ஜிஆர் பட ஷூட்டிங்கிற்காக சென்றிருந்தோம். எம்ஜிஆர் அவர்கள் யார் ஷூட்டிங் ஸ்பாட்டிற்கு வந்தாலும், வந்தவர்கள் அனைவரையும் சாப்பிட்டு போக சொல்லும் பாங்குடையவர். ஆனால் அந்த நாளில் தவிரக்க முடியாத ஏதோ காரணத்தினால் ஷூட்டிங் கேன்சல் ஆகிவிட்டதாக கூறினார்கள். ஆனாலும் அனைவரையும் சாப்பிட்டு போக வேண்டும் என்பது எம்ஜிஆர் பட ஷூட்டிங்கில் இருக்கும் அன்புக்கட்டளை.
எனினும் நாங்கள் சாப்பிட உட்கார்ந்த நேரம் அங்கு வந்த தயாரிப்பாளர், ‘எனக்கு ஷூட்டிங் கேன்சல் ஆயிடுச்சு.. நீங்க எல்லாம் இருந்து சாப்பிட்டு போங்க’ என்று சொன்னார். அவர் ஒன்றும் தவறாய் சொல்லவில்லை என்றாலும், சாப்பாட்டில் கைவைத்தபோது, அவர் அவ்வாறு சொன்னாதால், நாங்கள் ஒரு 10 பேர், சாப்பிடாமல் எழுந்து வந்துவ்விட்டோம், பின்னர் கடையில் நின்று டீ குடித்துவிட்டு சென்றுவிட்டோம்!” என்று கமல் குறிப்பிட்டார்.