வங்கக்கடலில் உண்டான காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வந்ததுடன், புயல் கரையை கடக்க உள்ளதால், காற்றின் வேகம் 40 முதல் 45 கி.மீ வேகத்தில் இருக்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இதனால் பொதுமக்கள் அவசியம் இல்லாமல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தரப்பில் இருந்து முன்னதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்துடன் சாலைகளில் ஆங்கங்கே மரங்கள் வேருடன் சாய்ந்து, போக்குவரத்து பாதிக்கப்பட, மாநகராட்சி ஊழியர்கள், மரங்களை அப்புறப்படுத்தி வருகின்றனர்.
இதனிடையே சென்னை கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டத்தில் மரம் விழுந்து கிடப்பதாக தகவல் வர, அங்கு விரைந்து சென்ற மாநகராட்சி ஊழியர்கள் உதயா என்பவர், அந்த கனமழையில் சிக்கி மயங்கிக் கிடந்துள்ளதை கண்டனர். அப்போது அதிர்ச்சி அடைந்த அவர்கள், உதயா இறந்துவிட்டதாக கருதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே, சம்பவ இடத்துக்கு டி.பி சத்திரம் காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி விரைந்து சென்று பார்த்தபோது உதயா, இறக்கவில்லை, மயக்க நிலையில்தான் இருக்கிறார் என்பதை அறிந்து, யாருடைய உதவிக்கும் காத்திராமல், தனது தோளில் தூக்கி போட்டுக்கொண்டு வேக வேகமாக ஓடி, ஆட்டோவில் ஏற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட வீடியோவில், ‘எப்படியாவது உயிரைக் காப்பாத்திடணும்..ஓடு..ஓடு’ என காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரி கூறிய வார்த்தைகள் பதிவாகியதுடன், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வலம் வந்ததை அடுத்து, காவல் ஆய்வாளர் ராஜேஸ்வரிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
இந்நிலையில் இதுகுறித்து பாராட்டி, தமது ட்விட்டர் பக்கத்தில் நடிகர் கமல்ஹாசன், “சாலையோரம் விழுந்து கிடந்தவரின் உயிரைக் காக்க தூக்கிக்கொண்டு ஓடும் காவல்துறை ஆய்வாளர் ராஜேஸ்வரியின் கடமையுணர்ச்சி பிரமிப்பூட்டுகிறது.அவரது வீரமும், சேவையும் போற்றுதலுக்குரியவை. முன்னுதாரண அதிகாரிக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.”, என நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசனையும் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். அத்துடன் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான விக்ரம் திரைப்படத்தில் நடிக்கிறார். ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் ‘விக்ரம்’ படத்தின் first Glance வீடியோ அண்மையில் கமல்ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு வெளியானது.
விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில் நடிக்கும் இப்படத்தில், கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார். இப்படத்துக்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசையமைக்கிறார்.