பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் அடுத்தடுத்த போட்டியாளர்களை நடிகர் கமல்ஹாசன் அறிமுகப்படுத்தி வைத்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு போட்டியாளரை அறிமுகப்படுத்துவதற்கு முன்பாக, “இந்த போட்டியாளரின் அறிமுகத்திற்கும் எனது முதல் பட அறிமுகத்துக்கு தொடர்பு இருக்கிறது” என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.
அனைவரும் எதிர்பார்ப்பில் இருந்தபோதுதான், அபினவ் மேடையில் ஏறி தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்போது அவர் யார் என்று கமல்ஹாசன் தன் வாயிலாக குறிப்பிடத் தொடங்கினார்.
அதன்படி, “என்னுடைய முதல் படம் களத்தூர் கண்ணம்மா. 4 வயது சிறுவனாக என்னை ஜெமினி கணேசன் மற்றும் சாவித்திரியிடம் அழைத்துச் சென்றார்கள். அந்த படத்தில் நடித்த பிறகு சாவித்திரி, என்னை தத்துப்பிள்ளை ஆகவே எடுத்துக் கொள்வதாக கூறியதை விளையாட்டாக நம்பி நானும் என் வீட்டில் வந்து அதற்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்லி கலவரம் செய்தேன்.
அந்த நேரம் சாவித்திரி அம்மா கர்ப்பம் தரித்தார். அப்போது எனக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அப்படி சாவித்திரி அம்மாவின் மகளுக்கு பிறந்தவர்தான் அபினவ். அபினவின் அம்மா என்னை சகோதரர் என்றே அழைப்பார். அபினவ்க்கு நான் மாமா என்று குறிப்பிட்டார் நடிகர் கமல்ஹாசன்.
தன்னை பற்றி பேசிய அபினவ், “சாவித்திரி - ஜெமினி கணேசனின் பேரனாக முன்னிறுத்தாமல் என் திறமையை வைத்து முன்னிறுத்த வேண்டும் என்று நினைத்தேன். மிக இளம் வயதில் திருமணம் செய்துவிட்டேன். அதை தாமதமாக செய்திருந்தால்ம் என் குடும்பத்தினர் இன்னும் கொஞ்சம் மேனேஜ் செய்திருப்பார்கள் என்கிற எண்ணம் உண்டு.
ராமானுஜர் பற்றிய ஒரு ஆவணப்படம் இயக்கியிருக்கிறேன். ஒரு சில திரைப்படங்களில் நடித்திருக்கிறேன். இப்படி மல்டிபிள் பணிகளைச் செய்த நான் திரைத்துறையில் நடிப்பதற்கான முயற்சியை எடுக்க இருக்கிறேன். அதற்கான களமாக பிக்பாஸ் அமைய வேண்டும் என்று விரும்புகிறேன்!” தெரிவித்திருந்தார்.
நடிகர் கமல்ஹாசனும் இதற்கு வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார். இதனிடையே அபினவின் குடும்பத்தினர் வீடியோ வாயிலாக அவருக்கு வாழ்த்துக்களை தெரிவிக்க, பிக்பாஸ் வீட்டுக்குள்ளே அபினவ் அனுப்பி வைக்கப்பட்டார்.