இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களிடையே அது ஒரு வித கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் ஒரு சிலர் கொரோனா வைரஸில் இருந்து முழுமையாக மீண்டு வந்து மக்களுக்கு நம்பிக்கை அளித்து வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக கமல்ஹாசன் தயாரிப்பில் மாதவன் ஹீரோவாக நடித்திருந்த 'நளதமயந்தி', ராதாமோகன் இயக்கத்தில் பிரசன்னா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்த 'அழகிய தீயே' உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்தவர் ரமேஷ் விநாயகம். பிற இசையமைப்பாளர்களின் இசையிலும் அவர் ஏராளமான பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில் அவர் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதிலிருந்து மீண்ட கதையை ஃபேஸ்புக் பக்கத்தில், ''எனக்கு எப்படி வைரஸ் வந்தது என்று தெரியவில்லை. கடந்த மார்ச் 22 ஆம் தேதி லாக்டவுன் ஆரம்பிக்கும் போது டெல்லியில் விமானம் மூலம் சென்னை வந்தேன். அதன் பிறகு நான் வீட்டை விட்டு வெளியே போகவில்லை. நான் என் அம்மாவுடன் தங்கியிருந்தேன்.
எனக்கு காய்ச்சலும், லேசான தலைவலியும் தொண்டையில் கரகரப்பும் இருந்தது. சில மாத்திரைகளை நான் எடுத்துக்கொண்டேன். ஆனால் அது எந்த பயனும் தரவில்லை. என்னுடைய குடும்ப டாக்டரை அழைத்து டெஸ்ட் எடுத்துக்கொண்டேன். ஜூன் 1 ஆம் தேதி எனக்கு கொரோனா இருப்பது உறுதியானது. உடனடியாக என் அம்மாவை விட்டு விலகி, தனியாக வேறு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். எனக்கு நெஞ்சில் சில அச்சுறுத்தல்கள் ஏற்பட்டன. மிகவும் சோர்வுற்றேன். எனது மனைவியும், எனது குழந்தைகளும் கவலையடைந்தனர். எனக்கும் பயம் ஏற்பட்டது'' என்றார்.
இதனையடுத்து கொரோனாவில் இருந்து மீண்டது குறித்து தெரிவித்த அவர், ''பயப்பட தேவையில்லை என நான் இப்பொழுது சொல்வேன். என்ன செய்கிறீர்கள், எதனை தொடுகிறீர்கள் என்பதில் கவனமாக இருங்கள். அவசர தேவைகளுக்கு வெளியே சென்றாலும், கூடுதல் கவனமாக இருங்கள். ஏனெனனில் நீங்கள் வீட்டிற்கு வைரஸிற்கு கொண்டு வரலாம். மேலும் மூச்சுப்பயிற்சி செய்யுங்கள், நுரையீரலை தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள். நேர்மறை எண்ணங்களுடன் இருங்கள்.
நான் இப்பொழுது நல்ல நிலையில் இருக்கிறேன். உங்கள் மன நிலையை சமநிலையை சமநிலையில் வைத்துக்கொள்ளுங்கள். என்ன வேணாலும் நடந்திருக்காலம் நான் இப்பொழுது உங்களுடன் பேசிக்கொண்டிருக்கிறேன். இன்று எனது பிறந்தநாள். இது என்னுடைய புது வாழ்க்கை என்று உணர்கிறேன். என் வாழ்க்கையில் சில விஷயங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. பின்னால் பார்த்துக்கொள்ளலாம் என்று இருந்தேன். ஆனால் இப்போது முடியாது. நீங்கள் உடனடியாக செய்ய வேண்டும். காலத்தின் அருமையை நான் இன்று உணர்ந்திருக்கிறேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.