விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்த சீசனுக்கான பணிகளும், தொகுப்பாளர் யார் என்பது குறித்தும் தகவல்கள் கிடைத்துள்ளன.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரே வீட்டில் கேமராக்களுக்கு மத்தியில் போட்டியாளர்கள் தங்கவைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். 24 மணி நேரம் நடக்கும் பல விஷயங்களில் சுவாரஸ்யமானவை தொலைக்காட்சியில் மக்களுக்கு திரையிடப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் வாரம் முழுவதும் நடக்கும் கலேபரம், கலவரம், காதல், நட்பு, பாசம் ஆகியவற்றை தாண்டி வார இறுதி நாட்களில் வரும் கமல்ஹாசனின் விசாரணை பகுதியும், எலிமினேஷன் பகுதியும் மக்களிடம் கூடுதல் வரவேற்பை பெற்று வருகிறது.
எத்தனை பெரிய சம்பவங்கள் பிக் பாஸ் வீட்டிற்குள் அரங்கேறினாலும், தெரிந்தவர், பழகியவர், பணிபுரிந்தவர் என்ற கரிசனம் ஏதும் காட்டாமல், நடுநிலையாக ஒரு பார்வையாளராக பிரச்சனையை கையாளுவதும், போட்டியாளர்கள் ஏற்கும் விதத்தில் அறிவுரை கூறுவதும், அவர்களது தவறுகளை அவர்களது பாணியேலே நறுக்கென சுட்டிக் காட்டும் விதமும் கமலுக்கே உரியது என்றால் அதை யாராலும் மறுக்க முடியாது.
மக்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க இந்த மேடையை தான் பயன்படுத்திக் கொள்வதாக கமல்ஹாசன் அடிக்கடி கூறுவது வழக்கம். அதை அவர் திறம்பட செய்தும் வருகிறார். பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனையையும் தாண்டி சமூக பிரச்சனையையும் பிக் பாஸ் மேடையில் மக்கள் முன்னிலையில் விவாதித்திருக்கிறார்.
தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் 3வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், சீசன் 4 தொடங்குவதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கிவிட்டதாக நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன. அதன்படி, அடுத்ததாக ஒளிபரப்பாகவுள்ள பிக் பாஸ் தமிழ் சீசன் 4 நிகழ்ச்சியையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க சம்மதம் தெரிவித்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் இந்நிகழ்ச்சி வரவேற்பை பெற்று வந்தாலும், தமிழில் இந்நிகழ்ச்சியை குடும்பமாக பார்த்து ரசிக்கவும், அதில் இருந்து வாழ்க்கை பாடம் கற்கவும் கமல்ஹாசனுக்கு பெரும் பங்கு உண்டு. அதுவே தமிழில் இந்நிகழ்ச்சி வெற்றி பெறுவதாக கருதப்படுகிறது. எனினும், பிக் பாஸ் தமிழ் சீசன் 4 குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.