புதுடெல்லி: இந்திய, உலக அளவில் புகழ் பெற்ற கதக் நடனக் கலைஞர் பத்ம விபூஷன் பண்டித் பிர்ஜு மகாராஜ் திடீரென காலமானார்.
நாட்டின் இரண்டாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம விபூஷண் விருது பெற்றவர், அவர் பண்டித்-ஜி, மஹாராஜ்-ஜி என்று அவரது சீடர்கள் மற்றும் ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர், மேலும் இந்தியாவின் தலைச்சிறந்த கலைஞர்களில் ஒருவராகவும் இருந்தவர். அவரது மறைவு கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத இழப்பு என உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். பண்டித் பிர்ஜு மகராஜ் லக்னோவின் கல்கா-பிண்டடின் கரானாவின் அதிபராக இருந்தார். பண்டிட் பிர்ஜு மகாராஜ், நடனத் துறையில் அவரது பங்களிப்புகளுக்காக 1984 ஆம் ஆண்டில் இந்தியாவின் இரண்டாவது மிக உயர்ந்த சிவில் விருதான பத்ம விபூஷன் விருதைப் பெற்றார்.
டெல்லியில் உள்ள தனது வீட்டில் நேற்று இரவு பேரக்குழந்தைகளுடன் விளையாடிய போது திடீரென மயங்கி விழுந்துள்ள நிலையில், மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்று உள்ளனர். மருத்துவமனையில் பரிசோதித்த மருத்துவர்கள் பண்டித் பிர்ஜு மகாராஜ் ஏற்கனவே மாரடைப்பால் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தி உள்ளனர். பிர்ஜூ மகாராஜ் ஏற்கனவே சிறுநீரகக் கோளாறு காரணமாக டயாலிசிஸ் சிகிச்சைப் பெற்றுவந்தவர். அவருக்கு வயது 83.
அவரது பேரன் ஸ்வரன்ஷ் மிஸ்ரா அவரது மறைவு செய்தியை சமூக வலைதளங்களில் பகிர்ந்து கொண்டார். அதில் 17.01.2022 அன்று உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். கமல்ஹாசனின் வேண்டுகோளுக்காக கமல்ஹாசனின் இயக்கத்தில் 2013-ல் வெளியான விஸ்வரூபம் படத்தில் 'உனைக் காணாது நான்' என்ற துவக்க பாடலுக்கு நடன இயக்குனராகவும் செயல்பட்டவர். இந்த படத்தில் கதக் நடனம் அமைத்ததற்கு தேசிய விருதை வென்றவர்.