தமிழ் திரையுலகில், பல சிறந்த எழுத்தாளர்கள் இருந்தாலும், நகைச்சுவை எழுத்தாளர்கள் என்றால் நம் மனதில் உடனடியாக நினைவுக்கு வருவது, கிரேசி மோகன் தான்.
நாடகங்கள் மூலம் தனது காமெடிப் பயணத்தை தொடங்கியவர், அதன் பிறகு, தமிழ் சினிமாவிலும், தனது அசாத்திய திறமையால், கொடிகட்டிப் பரந்த கிரேசி மோகன், கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 10 ஆம் தேதி மரணம் அடைந்தார். இவரது மறைவு, ஒட்டுமொத்த திரையுலகை மட்டுமில்லாது, பல தமிழ் சினிமா ரசிகர்களையும் கண்ணீரில் நனையச் செய்தது.
இந்நிலையில், கிரேசி மோகனின் நெருங்கிய நண்பரான நடிகர் கமல்ஹாசன், கிரேசி மோகனின் நினைவு நாளன்று, அவருடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து, ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். அதில், 'நாடகமே உலகம் என்கிற ஞானச்சொல்லை, நகைச்சுவை நாடகமே உலகம் என்று மாற்றியவர். சிரிப்பு முகமூடிக்குள் தீவிர மரபிலக்கிய முகத்தோடு வானம் போல் வாழ்ந்து மறைந்தவர் கிரேஸி மோகன். இரண்டாம் நினைவு நாளில் அவரை நினைவு கூர்கிறேன்' என குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன், தனது சினிமா பயணத்தில் நடித்து ஹிட்டாகியிருந்த காமெடி படங்களான வசூல் ராஜ எம்பிபிஎஸ், மைக்கேல் மதன காமராஜன், சதி லீலாலாவதி, தெனாலி, பஞ்சதந்திரம் உள்ளிட்ட பல திரைப்படங்களுக்கு கிரேசி மோகன் வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.