விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.
கமல்ஹாசன் நடிப்பில் ‘விக்ரம்’ திரைப்படம் கடந்த ஜூன்3 முதல் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, பிலோமின் ராஜ் எடிட்டராக பணியாற்றியுள்ளார். கிரிஷ் கங்காதரண் ஒளிப்பதிவு செய்துள்ளார். கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது.
இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். நடிகர் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். காளிதாஸ் ஜெயராமன் கமலின் மகனாக 'பிரபஞ்சன்' எனும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மைனா நந்தினி, ஷிவானி, மகேஸ்வரி நடித்துள்ளனர். விக்ரம் படத்தின் ஆக்சன் காட்சிகளுக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உலகம் முழுவதும் விக்ரம் படம் மிகப்பெரிய வசூலை அள்ளிக்குவித்து வருகிறது.
விக்ரம் படம், அமெரிக்காவில் மூன்று நாட்களில் 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து சாதனை படைத்துள்ளது. இந்திய மதிப்பில் அமெரிக்காவில் 12 கோடி ரூபாயை வசூலாக ஈட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பேசிய உதயநிதி ஸ்டாலின் விக்ரம் படத்தின் தமிழக வசூலினை அதிகாரபூர்வமாக கூறியுள்ளார். அதன் படி விக்ரம் படம் தமிழகத்தில் 75 கோடி ரூபாயை ஷேராக வசூலித்துள்ளது என அறிவித்துள்ளார்.
இதுவரை வெளியான தமிழ் படங்களில் அதிக வசூல் செய்த படமாக விக்ரம் உருவெடுத்துள்ளது.