சென்னை: இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தின் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
கமல்ஹாசன் நடிக்கும் "விக்ரம்" படத்தை, மாநகரம், கைதி, மாஸ்டர் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் நடிகர்கள் விஜய் சேதுபதியும், மலையாள நடிகர் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர். கமல்ஹாசனின் மகனாக காளிதாஸ் ஜெயராம் நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஷிவானியும், மைனா நந்தினியும் நடிக்கின்றனர். கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கிறது. இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர், முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.
இந்தப் படத்திற்கு 'ஜல்லிக்கட்டு' படத்திற்காக தேசிய விருது வென்ற ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன் ISC ஒளிப்பதிவு செய்கிறார். இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கிறார். கமல்ஹாசன் பிறந்தநாளை முன்னிட்டு இந்த படத்தின் முன்னோட்டம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விக்ரம் படத்தின் ஆடியோ உரிமையை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.
விக்ரம் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பான் இந்திய படமாக ஜூன்-3 அன்று வெளியாகும் என கமல்ஹாசன் அறிவித்துள்ளார்.கடந்த டிசம்பரில் தொடங்கிய இறுதிக்கட்ட படப்பிடிப்பு (02.03.2022) அன்றுடன் நிறைவடைந்தது. இந்நிலையில் விக்ரம் படத்தில் புதியவகை கேமராவும், கேமரா தாங்கியும் பயன்படுத்தப்பட்டுள்ளது என மேக்கிங் வீடியோவில் தெரியவந்துள்ளது.
விக்ரம் படத்தின் சண்டைக்காட்சியில் பாண்டம் (Phantom) கேமரா பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பாண்டம் கேமரா புரட்சிகரமான அதிவேக கேமரா ஆகும், இதில் FPS (வினாடிக்கு பிரேம்கள்) 1000 இலிருந்து தொடங்கி சராசரியாக 76000 FPS வரை படங்களை படம் பிடிக்க முடியும்.
Phantom Flex 4K கேமராவின் விலை சுமார் ரூ.1 கோடி வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Kingsman, The secret service, Transcendence & Guardians of the Galaxy போன்ற ஹாலிவுட் படங்கள் இந்த வகைக் கேமராவில் படமாக்கப்பட்டவை. இந்த வகை கேமராக்கள் சில ஹாலிவுட் திரைப்படங்களைத் தவிர, பல்வேறு பாதுகாப்பு, ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளிலும் பயன்படுத்தப்படுகின்றன.