நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜூன் 3 முதல் ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் ரிலீஸாகி உள்ளது. இதில் இந்தி மொழியில் 'விக்ரம் ஹிட்லிஸ்ட்' என்கிற பெயரில் இப்படம் வெளியானது.
கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்திருந்தார். அனிருத் இசையில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை வரவேற்பைப் பெற்றது. இந்த படத்தில் கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்தனர். நடிகர் சூர்யா, ரோலக்ஸ் எனும் கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்ட இப்படம், இதுவரை வெளியான தமிழ் படங்களில் தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த படமாக உருவெடுத்தது. மேலும் படத்தின் வெற்றிக்கு காரணமான இயக்குனர் லோகேஷ் கனகராஜ்க்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்தார் கமல்ஹாசன். அதேபோல் உதவி இயக்குனர்களுக்கு இருசக்கர வாகனங்களை பரிசளித்தார் தயாரிப்பாளர் கமல்ஹாசன்.
இந்நிலையில், விக்ரம் திரைப்படம் 100வது நாளாக ஓடிக்கொண்டிருப்பது குறித்து நடிகர் கமல்ஹாசன் ஆடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார். 22 நொடிகள் ஓடும் அந்த ஆடியோவில் பேசியுள்ள கமல், “ரசிகர்களின் ஆதரவோடு விக்ரம் திரைப்படம் நூறாவது நாளை எட்டியிருக்கிறது. மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன்.” என்று நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளது ரசிகர்களிடையே மிகுந்த நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக, “தலைமுறைகளைத் தாண்டி என்னை ரசிக்கும் உங்கள் ஒவ்வொருவரையும் மானசீகமாகத் தழுவிக் கொள்கிறேன்” என குறிப்பிட்ட கமல், “விக்ரம் வெற்றிக்கு காரணமாக இருந்த ஒவ்வொருவருக்கும் எனது இதயம் கனிந்த நன்றி.” என்று தெரிவித்துள்ளதுடன், இப்படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் குறித்து பேசும்போது, “தம்பி லோகேஷிற்கு என் அன்பும், வாழ்த்தும்!” எனக் கூறியுள்ளார். கமலை அவரது ரசிகர்கள் ஆண்டவர் என்றே அழைக்கின்றனர். இப்படத்தின் பத்தல பத்தல பாடலில் ‘ஆண்டவரே ஏத்தி பாடுங்க’ என்கிற வசனத்தை வைத்திருப்பார்கள். அப்படி ஒரு ஃபேன் பாயாக லோகேஷ் எடுத்த இந்த படத்தின் இந்த வெற்றி கொண்டாட்டங்கள் நிறைந்தது என ரசிகர்கள் குறிப்பிட்டு இந்த ஆடியோவை பகிர்ந்தும் வருகின்றனர்.