2021, டிச.29, சென்னை, Kamalhassan: நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலான ‘விக்ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் சிறப்பு முன்னோட்ட காட்சி ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றிருந்தது.
KH House of Khaddar தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன், தொகுத்து வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சியில் வார இறுதியில் அவர் போட்டியாளர்களுடன் உரையாடுவார். இன்னும் சுமார் 20 நாட்களில் இந்நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ளது. முன்னதாக சீசன் 4, பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகர் கமல்ஹாசன், கதருக்காக புது பிராண்ட் ஒன்றைத் துவங்கி இருப்பதாகக் கூறி அதன் பெயரையும், லோகோவையும் அறிமுகப்படுத்தி இருந்தார்.
இந்திய கைத்தறி நெசவாளர்களின் வாழ்வு மேம்பட
மேலும் அந்நிகழ்ச்சி உட்பட பல்வேறு இடங்களிலும் கதர் ஆடைகளை அணிந்தும், கதர் ஆடை குறித்த விழிப்புணர்வை அவ்வப்போது ஏற்படுத்தியும் வந்தார். KH - House of Khaddar என்கிற தன் நிறுவனத்தின் பிராண்ட் பெயரை அறிவித் கமல்,
தேசத்தின் இளைஞர்களைக் கவரும் வகையில் புதுவித பாணியான, குளிர்ச்சியான மற்றும் நவீன துணியைக் காட்சிப்படுத்துவதை ஹவுஸ் ஆஃப் கதரின் நோக்கம் என்றும் தெரிவித்தார். இந்தியாவில் உள்ள கைத்தறி நெசவாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதையும் இந்த லேபிள் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொர்ந்து ஹவுஸ் ஆஃப் கதரின் தயாரிப்பிலான ஆடைகளை கமல்ஹாசன் மற்றும் பல மாடல் கலைஞர்கள் அணிந்து வரும் முன்னோட்ட வீடியோவையும் அதன் பின்னர் காண முடிந்தது. பிரபல ஒளிப்பதிவாளர் ரத்னவேலுவின் ஒளிப்பதிவில் அந்த வீடியோ வெளியானது.
சிகாகோவில் KH ஃபேஷன் லைன்
இதனையொட்டி சிகாகோவில் தனது முதல் பேஷன் லைனைத் தொடங்கிவைத்த நடிகர் கமல்ஹாசன், சிகாகோவில் கதர் ஆடை மற்றும் வாசனை திரவியத்தை தமது நிறுவனத்தின் கீழ் அறிமுகப்படுத்தினார். மேலும் அவ்விழாவில், “சிகாகோ நகரத்துக்கு ஒரு சிறப்புமிக்க வரலாறு உள்ளது. இங்குள்ள தேசிய கலாச்சாரம் தன்னைத்தானே பேசுகிறது. எங்கள் பிராண்டுகளை காட்சிப்படுத்த சரியான நகரம் தேவை. வட அமெரிக்காவில் வேறு எங்கும் இல்லாத அளவில், இங்குள்ள மக்கள் நறுமணம் மற்றும் ஆடை இரண்டையும் அதிகம் புரிந்துகொள்கிறார்கள்.” என்று கமல்ஹாசன் பேசியிருந்தார்.
வரிவிதிப்பு கவலை தருகிறது
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசன் தற்போது, நெசவாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கான வரி உயர்வு குறித்த தனது கருத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், “நெசவாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வரியை உயர்த்தியுள்ள விதம் குறித்து நான் மிகவும் கவலையடைகிறேன். இதுபோன்ற வரிவிதிப்பு மேற்கத்திய கார்ப்பரேட் ஜவுளி நிறுவனங்களுக்கு உதவும், நமது இந்திய நெசவாளர்களுக்கு உதவாது.” என்று குறிப்பிட்டுள்ளார்.
நெசவாளர்களும் விவசாயிகள் போல் டெல்லியில் அமர்வதை நான் விரும்பவில்லை
மேலும், “டெல்லியில் நமது விவசாயிகள் அமர்ந்திருப்பது போல், நமது நெசவாளர்களும் அமர்ந்திருப்பதை நான் விரும்பவில்லை. காதி அல்லது கேஹெச் ஹவுஸ் ஆஃப் கதர் என்பதற்கும் அரசியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, ஆனால் வரிவிதிப்பு அரசியலில் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. அரசியல் குடிமக்களை பாதிக்காமல் இருக்கட்டும், துரதிர்ஷ்டவசமாக நம் நெசவாளர்கள் போன்ற அமைப்புசாரா தொழிலாளர்கள் இத்தகைய கொள்கைகளால் சுமைகளை சுமப்பார்கள்." என்று கமல் குறிப்பிட்டுள்ளார்.