நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து ரசிகர்கள் பதறிப் போயினர்.
இதனிடையே நடிகர் கமல்ஹாசன், தம்முடைய ட்விட்டரில் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என்று குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்த் திரைப்பட நடிகராகவும், இயக்குனராகவும், பாடகராகவும், பாடலாசிரியராகவும், வசனகர்த்தாவாகவும் என பன்முகங்கள் கொண்ட நடிகர் கமல்ஹாசன் தற்போது மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகவும் பரபரப்பாக இயங்கி வருகிறார். இதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசனை தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கிறார்.
இதனிடையே சென்னை கனமழையின்போது மக்களை நேரில் சந்தித்து வெள்ள நிவாரணங்களை வழங்கினார். தற்போது சென்னை போரூரில் இருக்கும் ஸ்ரீ ராமச்சந்திரா மெடிக்கல் செண்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அதில், “சுவாச பாதை தொற்று & காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக SRMC-யில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விக்ரம்’ எனும் திரைப்படத்தில் விஜய் சேதுபதி மற்றும் ஃபகத் ஃபாசில் உள்ளிட்டோருடன் இணைந்து நடித்து வருகிறார்.