கடந்த வாரம் நடிகர் கமல்ஹாசன் அமெரிக்காவில் இருந்து இந்தியா திரும்பி வந்தபோது அவருக்கு லேசான கொரோனா அறிகுறிகள் இருந்த காரணத்தால் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாகவும், அதன் பிறகு அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று வைரஸ் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்தது.
மேலும் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதை அவர் தன்னுடைய ட்விட்டரில் பக்கத்தில் உறுதிப்படுத்தினார். அதில் “அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.
நடிகர் கமல்ஹாசன் தற்போது சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். கமல்ஹாசனின் உடல்நிலை குறித்த அறிக்கையும் சமீபத்தில் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டது. அதில், “சுவாச பாதை தொற்று & காய்ச்சல் (lower respiratory tract infection) காரணமாக SRMC-யில் நடிகர் கமல்ஹாசன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு ஏற்கனவே கொரோனா பாசிடிவ் உறுதி செய்யப்பட்டது. அவருடைய உடல்நிலை நிர்வாகத்தால் கண்காணிக்கப்பட்டு இருக்கிறது. அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. ” என குறிப்பிடப்பட்டது.
சில தினங்களுக்கு முன் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து கமலின் மகளும் நடிகையுமான ஸ்ருதி ஹாசன் டிவிட்டரில் டிவீட் செய்தார். அதில் "எனது தந்தையின் ஆரோக்கியத்திற்காக உங்கள் அனைவரின் வாழ்த்துகளுக்கும் பிரார்த்தனைகளுக்கும் நன்றி கூப்பிய கைகள் அவர் நலமுடன் இருக்கிறார், விரைவில் உங்கள் அனைவரையும் தொடர்பு கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறார் !!" என குறிப்பிட்டார்.
இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை குறித்து வந்த செய்திகளுக்கு மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக விளக்கம் அளித்து டிவீட் செய்யப்பட்டுள்ளது. அதில் "வணக்கம்! தலைவர் அவர்கள் மருத்துவமனையிலிருந்து இன்னும் டிஸ்சார்ஜ் ஆகவில்லை. ஆனால், நலமுடன் இருக்கிறார். விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன். வெளியில் உலவும் நிழற்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் அப்போலோ மருத்துவமனையில் கால் அறுவைசிகிச்சை முடிந்து தலைவர் வீடு திரும்பியபோது வெளியான புகைப்படம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.