கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாக கொண்டு, முன்னணி இயக்குனரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் படத்தை இரண்டு பாகங்களாக இயக்கி வருகிறார். லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இதன் முதல் பாகமான 'பொன்னியின் செல்வன் - பாகம் 1', செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி திரை அரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
![kamal haasan about ponniyin selvan movie from mgr period kamal haasan about ponniyin selvan movie from mgr period](https://tamil.behindwoods.com/tamil-movies-cinema-news-ta/images/kamal-haasan-about-ponniyin-selvan-movie-from-mgr-period-new-home-mob-index.jpg)
இந்த படத்தில் நடிகர்கள் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்யா லெக்ஷ்மி, த்ரிஷா, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், பிரபு, விக்ரம் பிரபு, லால், ஜெயராம், ரஹ்மான் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் விக்ரமும், வந்தியத்தேவனாக கார்த்தியும், அருண்மொழி வர்மனாக ஜெயம் ரவியும் நடிக்கின்றனர். நந்தினியாக ஐஸ்வர்யா ராயும், குந்தவையாக த்ரிஷாவும் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். ரவிவர்மன் ISC ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலையில், இந்த படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழா, நேரு உள் விளையாட்டு அரங்கில் மிகவும் பிரம்மாண்டமாக நடந்தது. இந்த விழாவில், உலக நாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர்கள் ஷங்கர், மிஷ்கின், நடிகர் சித்தார்த், நடிகை அதிதி ராவ் என ஏராளமான திரை பிரபலங்கள், பொன்னியின் செல்வன் படத்தின் டிரெயிலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோர் ஒன்றாக மேடையில் தோன்றி இருந்தனர். விக்ரம் படத்தின் வெற்றிக்காக கமலை வாழ்த்தவும் செய்தார் ரஜினிகாந்த். மேலும், இருவரும் பொன்னியின் செல்வன் நாவல் தொடர்பாக பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
அப்போது பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக எடுப்பதற்காக செய்த முயற்சிகள் குறித்து பேசிய கமல், "மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க வேண்டும் என்பதற்காக அதன் ரைட்ஸை வாங்கி வைத்திருந்தார். அவரிடம் இருந்து நான் அதனை வாங்கிக் கொண்டேன். சீக்கிரம் அதனை படமாக எடுத்து விடு என்றும் என்னிடம் சொன்னார் எம்.ஜி.ஆர். ஆனால், அப்போது எனக்கு புரியவில்லை.
பிறகு என்னிடம் இருந்து கதை நிறைய பேரிடம் போனது. அதில் எனக்கு வருத்தம் தான் இருந்தது. ஆனால், அத்தனை வருடத்து கனவை தேக்கி வைத்து, செய்தே தீருவேன் என்ற வைராக்கியத்துடன் மணி சார் செய்து காட்டி உள்ளார். அதை பாராட்டியே தீர வேண்டும்" என கமல் கூறினார்.