ரஜினியோடு இணைந்து நடிப்பது பற்றி நடிகர் கமல்ஹாசன் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது பதிலளித்துள்ளார்.
விக்ரம்…
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது. மிகப்பெரிய அளவில் இந்தியா முழுவதிலும், வெளிநாடுகளிலும் விக்ரம் வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.
வெற்றி…
விக்ரம் படத்தின் வெற்றியால் தயாரிப்பாளர் & நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு 'லெக்ஸஸ்' ரக காரை பரிசாக அளித்துள்ளார். இந்த கார் ஜப்பான் நாட்டின் பிரபல டுயோட்டா நிறுவனத்தின் பிரீமியம் பிராண்ட் ஆகும். இந்த லெகஸஸ் செடான் வகை காரின் விலை 60 லட்ச ரூபாய் முதல் 70 லட்சம் வரை சென்னையில் விற்கப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. மேலும் இயக்குனர் லோகேஷின் உதவியாளர்கள் 13 பேருக்கு மோட்டார் பைக்குகளையும் பரிசாக வழங்கியுள்ளார். மற்றும் நடிகர் சூர்யாவுக்கு ரோலக்ஸ் வாட்ச் ஒன்றையும் பரிசாக வழங்கினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு…
இதையடுத்து இன்று விக்ரம் படத்தின் சக்சஸ் மீட் பத்திரிக்கையாளர்களோடு நடந்தது. அதில் நடிகர் கமல் மற்றும் இயக்குனர் லோகேஷ் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது இருவரிடமும் பல கேள்விகள் கேட்கப்பட்டன. அப்போது கமலிடம் “நீங்கள் ரஜினியோடு நடித்து நீண்ட நாளாகிவிட்டது. இப்போதாவது லோகேஷ் இயக்கத்தில் ரஜினி, கமல் நடிக்க வாய்ப்பிருக்கிறதா?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த கமல், “முதலில் இதை இயக்குனர் லோகேஷ் என்னிடம் சொல்லவேண்டும். பின்னர் நானும் அவரும் ரஜினியிடம் சொல்லவேண்டும். அவர் சம்மதம் சொன்னதும் நாங்கள் மூவரும் இணைந்து உங்களிடம் சொல்லவேண்டும். என்னைப் பொறுத்தவரை எப்போதுமே ரஜினியோடு இணைந்து நடிக்க சம்மதம்” எனக் கூறியுள்ளார்.