விக்ரம் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியானது.
விக்ரம்
கமல்ஹாசன் நடிப்பில் நான்காண்டு இடைவெளிக்குப் பிறகு ஜூன் 3 ஆம் தேதி ‘விக்ரம்’ திரைப்படம் உலகம் முழுவதும் 5 மொழிகளில் ரிலீஸாகி உள்ளது. இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்க, கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனமே தயாரித்துள்ளது. கமலுடன், விஜய் சேதுபதி மற்றும் பஹத் பாசில் ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு ஆரம்பம் முதலே எதிர்பார்ப்புகள் ரிலீஸுக்குப் பின் அதைப் பூர்த்தி செய்து ரசிகர்களை மகிழ்வித்துள்ளது.
விக்ரம் Hitlist…
விக்ரம் திரைப்படம் தெலுங்கில் விக்ரம் ஹிட்லிஸ்ட் என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஜூன் 3 ஆம் தேதி வெளியானது. படத்தை ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் வெளியிட்டது. முன்னதாக இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தன. ரிலீஸுக்கு முன்னதாக நடிகர் கமல்ஹாசன் ஐதராபாத்தில் ரசிகர்கள் மற்றும் ஊடகங்களை சந்தித்தது அதிகளவில் கவனம் பெற்றது.
வெற்றி விழா…
இந்நிலையில் ரிலீஸூக்குப் பின்பு உலகம் முழுவதும் படத்துக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துள்ளதை அடுத்து ஆந்திரா மற்றும் தெலுங்கானாவிலும் விக்ரம் படத்துக்கு வார இறுதி ஓப்பனிங் சிறப்பாக அமைந்துள்ளது. முதல் 3 நாட்களில் மட்டும் விக்ரம் திரைப்படம் 10 கோடி ரூபாய்க்கும் மேல் மொத்தமாக வசூல் செய்துள்ளதாக ஸ்ரேஷ்த் மூவிஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. அடுத்த வாரத்திலும் விக்ரம் திரைப்படம் நல்ல வசூலை செய்துள்ள நிலையில் தெலுங்கில் விக்ரம் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இதையடுத்து படக்குழுவினர் கலந்துகொண்ட விக்ரம் வெற்றி விழா சமீபத்தில் நடந்தது. கமல் மற்றும் லோகேஷ் ஆகியோர் கேக் வெட்டி படத்தின் வெற்றியைக் கொண்டாடினர்.
கமல் பேச்சு…
இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் கமல்ஹாசன் “விக்ரம் திரைப்படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்துள்ளது. பலரும் படத்தை நான்கு முறையெல்லாம் பார்த்ததாக சொல்கிறார்கள். சினிமாவுக்கு மொழி பேதம் கிடையாது. நான் ஒரு நடிகராக இருந்து ஸ்டார் ஆக மாறுவதற்கு தெலுங்கு சினிமா எனக்கு உதவி செய்துள்ளது. நான் நடித்த தெலுங்கு படமான மரோசரித்ரா எந்த சப்டைட்டிலும் இல்லாமலேயே சென்னையில் இரண்டரை வருடம் ஓடியது. நீங்கள் இப்போது விக்ரம் படத்துக்கு தந்திருக்கும் ஆதரவை தொடர்ந்து தரவேண்டும்” என பேசியுள்ளார்.