இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் ஷங்கர் ஆகியோர் கலந்துக் கொண்டனர். காப்பான் இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், ‘சூர்யாவின் இன்னொரு முகம் சில நாட்களுக்கு முன் தெரிந்தது என கூறினார். புதிய கல்வி கொள்கை விவகாரத்தில் சூர்யாவின் கருத்தை வரவேற்பதாக கூறிய ரஜினிகாந்த், நான் பேசினால் பிரதமர் மோடிக்கு கேட்டிருக்கும் என்று சொன்னார்கள், ஆனால் சூர்யா பேசியதே பிரதமர் மோடிக்கு கேட்டுள்ளது’ என கூறினார்.
‘இந்த கல்வி கொள்கை பற்றி சாதாரணமாக சூர்யா பேசவில்லை, மாணவர்கள் படும் இன்னல்களை அருகில் இருந்து பார்த்ததால் அதனை பேசியுள்ளார். சினிமா ரசிகர்களுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் உங்களது தொண்டு தேவை சூர்யா’ என்று வாழ்த்தி, காப்பான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைய தனது வாழ்த்துக்களையும் தெரிவித்து கொண்டார்.
இயக்குநர் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ஒரு படம் நடிக்க வேண்டியிருந்தது, ஆனால் சில காரணங்களால் அது நடைபெறவில்லை என்ற ரஜினிகாந்த், தான் நடித்து வரும் தர்பார் திரைப்படம் குறித்தும் பேசினார். ‘தர்பார்’ திரைப்படத்தில் இதுவரை இப்படி ஒரு ரஜினி படம் வந்திருக்கக் கூடாது என சொல்லி சொல்லி ராட்சசன் மாதிரி இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உழைத்து வருவதாக ரஜினிகாந்த் தெரிவித்தார்.