நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள ‘ராட்சசி’ திரைப்படத்தின் ப்ரஸ் மீட் நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது.

டிரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் ஜோதிகா நடித்து வரும் படம் 'ராட்சசி'. இந்த படத்தை கௌதம் ராஜ் இயக்கியுள்ளார். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கோகுல் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் பாடல்கள், டீசர் என அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.
இதில் கலந்துக் கொண்டு பேசிய நடிகை ஜோதிகா, ராட்சசி படத்தின் கதை வழக்கமானதாக இருந்தாலும், அது சொல்லப்பட்டிருக்கும் சமூக கருத்து மற்ற படங்களை விட வித்தியாசமாக இருக்கும். இப்படத்தில் புதிய டீமுடன் பணியாற்றியது புதுவிதமான அனுபவத்தை அளித்திருப்பதாக கூறினார்.
இதைத் தொடர்ந்து பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் சொன்ன ஜோதிகா, தமிழகத்தில் நீட் தேர்வு தேவையா என்பது குறித்து தனது கருத்தை தெரிவித்தார். பின் கார்த்தியும் ஒரு படத்தில் நடித்து வரும் நிலையில், சூர்யாவுடன் மீண்டும் எப்போது இணைந்து நடிப்பீர்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜோதிகா, நல்ல கதை அமைந்தால் இணைந்து நடிக்கலாம் என கூறினார்.
ஜோதிகாவின் ‘ராட்சசி’ திரைப்படம் வரும் ஜூலை.5ம் தேதி ரிலீசாகவுள்ளது. இது தவிர 'பாபநாசம்' இயக்குநர் ஜித்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தியுடன் இணைந்து ஒரு படம், 'ஜாக்பாட்' உள்ளிட்ட படங்களில் ஜோதிகா நடித்து வருகிறார்.