‘8 தோட்டாக்கள்’ மற்றும் ‘ஜீவி’ புகழ் வெற்றி நடிக்கும் புதிய தமிழ் திரைப்படம் 'பம்பர்'.
கேரள லாட்டரியை அடிப்படையாகக் கொண்ட இந்த படத்தை சு. தியாகராஜா தயாரிப்பில், எம். செல்வகுமார் இயக்குகிறார். லாட்டரி சீட்டு என்பது ஒரு காலத்தில் அதிர்ஷ்டத்தையே நம்பியும் எதிர்பார்த்தும் இருந்தவர்களால் மறக்க முடியாததாக இருந்தது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு தடை பண்ணப்பட்டாலும், கேரளாவில் இன்னும் புழக்கத்தில் உள்ளது. இந்நிலையில் இதை அடிப்படையாக வைத்து ‘பம்பர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.
வேதா பிக்சர்ஸ் பேனரில் சு. தியாகராஜா தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர்கள் மீரா கதிரவன் மற்றும் ‘கொம்பன்’ முத்தையா உள்ளிட்டவர்களிடம் பணியாற்றிய அனுபவமுள்ள எம்.செல்வகுமார் இப்படத்தை இயக்குகிறார். கோவிந்த் வசந்தா இசையமைக்க கார்த்திக் நேத்தா பாடல்களை எழுதுகிறார்.
படத்தை பற்றி பேசிய இயக்குநர் செல்வகுமார், “கேரள பம்பர் லாட்டரி தான் இப்படத்தின் கதைக்களமாகும். வெற்றி கதாநாயகனாகவும், அதற்கு இணையான கதாபாத்திரத்தில் நடிகர் ஹரீஷ் பேரடியும் நடிக்கவுள்ளனர். இந்த திரைப்படத்தை தூத்துக்குடி மற்றும் கேரளாவில் படம் பிடிக்க திட்டமிட்டுள்ளோம். விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது” என்றார்.
இப்படத்தின் ஒளிப்பதிவை நெடுநல்வாடை, எம்ஜிஆர் மகன், ஆலம்பனா மற்றும் கடமையை செய் ஆகிய திரைப்படங்களின் ஒளிப்பதிவாளர் வினோத் ரத்தினசாமி கையாள்கிறார். படத்தொகுப்புக்கு மு.காசிவிஸ்வநாதன் பொறுப்பேற்றுள்ளார். இதர நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்பட்டுள்ளது.