நடிகர் ஜீவாவின் நடிப்பில் புதிய திரைப்படம் ஒன்றின் ஃபர்ஸ்ட் லுக்கை, அவரது பிறந்த நாளான இன்று படக்குழு வெளியிட்டுள்ளது.
தன்னுடைய திரைப் பயணத்தில், ராம், கற்றது தமிழ், ஈ போன்ற வேறொரு பரிணாமத்திலான திரைப்படங்கள் மூலம், ரசிகர்களை கவனிக்க வைத்திருந்தாலும், கலகலப்பாக, சிரித்து பேசி அசத்தும் ஜீவா தான் பலருக்கு ஃபேவரைட்.
இளைய தலைமுறை நடிகரான ஜீவாவின், சிவா மனசுல சக்தி, என்றென்றும் புன்னகை உள்ளிட்ட ரோம் - கம் திரைப்படங்களுக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
ஃபர்ஸ்ட் லுக்
இப்படி காமெடி மற்றும் ரொமான்ஸ் காட்சிகள் மூலம், மக்கள் மனதை கவரும் நடிகர் ஜீவா, அடுத்ததாக அப்படி ஒரு கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் தான் நடித்து வருகிறார். 'வரலாறு முக்கியம்' என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், அவரது பிறந்த நாளான இன்று, வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தினை புதுமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார்.
சூப்பர் குட் பிலிம்ஸ்
ஜீவாவின் தந்தையான RB சௌத்ரி, சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இந்த படத்தை தயாரிக்கிறார். இவரது அவர்களின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் 92 ஆவது திரைப்படமாகும். கடந்த ஆண்டு, ஜீவா மற்றும் அருள்நிதி இணைந்து நடித்திருந்த 'களத்தில் சந்திப்போம்' என்ற திரைப்படத்தையும் RB சௌத்ரி தான் தயாரித்திருந்தார்.
நடிகர்கள் பட்டாளம்
மேலும், சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படத்தின் மூலம், தமிழ் ரசிகர்களை கவனிக்க வைத்த காஷ்மீரா பர்தேஷி, இதில் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்களுடன், பிரக்யா நாகரா, VTV கணேஷ், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
ரசிகர்கள் வாழ்த்து
இந்த படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைக்க, சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜீவாவின் பிறந்த நாளான இன்று, இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ள நிலையில், பிறந்த நாள் வாழ்த்துக்களுடன், படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்றும் அவரது ரசிகர்கள் வாழ்த்தி வருகின்றனர்.
அப்டேட்
அதே போல, வரலாறு முக்கியம் திரைப்படம் குறித்த அடுத்த கட்ட அப்டேட்கள் வரும் நாட்களில் வெளியிடப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் நடிப்பில், கடந்த டிசம்பர் மாதம் வெளியாகியிருந்த '83' திரைப்படத்தில், நடிகர் ஜீவா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம், ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.