கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தி வருகிறது. பல்வேறு துறையைச் சேர்ந்த பிரபலங்கள் கொரோனாவினால் பாதிக்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக சேப்பாக்கம் - திருவல்லிக்கேனி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் சமீபத்தில் கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று (10/06/2020) காலை 8.05 மணிக்கு மரணமடைந்ததாக கூறப்படுகிறது.
இவர் அமீர் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்து வெளியான 'ஆதி-பகவன்' படத் தயாரிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது மறைவு அரசியல் மற்றும் தமிழ் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது இறுதி சடங்குகள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.