நடிகர் ஜெயம் ரவி அடுத்ததாக மாஸ்டர் திரைப்படத்தின் தயாரிப்பாளருடன் இணையவுள்ள திரைப்படம் குறித்து தகவல் வெளிவந்துள்ளது.
சம்திங் சம்திங், தில்லாலங்கடி, கோமாளி உள்ளிட்ட திரைப்படங்களில் மிகவும் கலகலப்பான கதாபாத்திரங்களிலும், அதே வேளையில், இன்னொரு பக்கம் தனி ஒருவன், பேராண்மை என சீரியஸான கதாபாத்திரங்களிலும், தன்னுடைய திறமையான நடிப்பால் அசத்துபவர் ஜெயம் ரவி.
இவரது நடிப்பில் கடைசியாக, 'பூமி' திரைப்படம், கடந்த 2021 ஆம் ஆண்டு, ஜனவரி 14 ஆம் தேதி, ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியிருந்தது. ஜெயம் ரவியின் 25 ஆவது திரைப்படமாக வெளியான பூமியில், அவருடன் நிதி அகர்வால், தம்பி ராமையா, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வன்
இதனைத் தொடர்ந்து, மணிரத்னம் இயக்கி வரும் பிரம்மாண்ட திரைப்படமான 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் ஜெயம் ரவி நடித்துள்ளார். இதில், தன்னுடைய காட்சிகளுக்கான படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அடுத்ததாக எம். ராஜேஷ் இயக்கத்திலும், திரைப்படம் ஒன்றில் நடிக்க, ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் அப்டேட்
இந்நிலையில், ராஜேஷ் திரைப்படத்திற்கு பிறகு, ஜெயம் ரவி நடிக்கவுள்ள திரைப்படம் குறித்து, அசத்தல் அப்டேட் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது. மஹான், கோப்ரா உள்ளிட்ட படங்களை தயாரித்த லலித் குமாரின் செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோஸுடன் இரண்டு திரைப்படங்களில் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளார்.
மாஸ்டர் தயாரிப்பாளர்
விஜய் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட்டான 'மாஸ்டர்' திரைப்படத்தின் இணை தயாரிப்பாளரும் லலித் குமார் தான். இதனைத் தொடர்ந்து, தற்போது ஜெயம் ரவி நடிக்கும் இரண்டு படங்களையும் அவர் தயாரிக்கவுள்ளார்.
படக்குழு விவரம்
இந்த திரைப்படங்களின் படப்பிடிப்பு, 2023 ஆம் ஆண்டு ஆரம்பமாகும் என கூறப்படும் நிலையில், படத்தின் இயக்குனர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் இதர நடிகர், நடிகைகள் குறித்த விவரம், விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பிரபல தயாரிப்பாளரான லலித் குமாருடன், இரண்டு படங்கள் நடிக்க ஜெயம் ரவி ஒப்பந்தமாகியுள்ளதால், அவரது ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.