கடைசியாக பூமி திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஜெயம் ரவி, அடுத்ததாக பொன்னியின் செல்வன் ரிலீஸினை எதிர்நோக்கி வருகிறார்.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான மணிரத்னம், பொன்னியின் செல்வன் நாவல்களை மையப்படுத்தி, இரண்டு பாகங்களாக திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.
இதன் முதல் பாகம், செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியன்று வெளியாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி இருந்தது.
விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரகாஷ் ராஜ், பார்த்திபன், சரத்குமார், விக்ரம் பிரபு, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி என ஒரு நட்சத்திர பட்டாளமே பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்துள்ளதால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக உயரத்தில் உள்ளது.
ஜெயம் ரவியின் புதிய 'திரைப்படம்'
இந்த படத்தினை தொடர்ந்து, நடிகர் ஜெயம் ரவி அகிலன் என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து, ஜன கண மண, ராஜேஷ் இயக்கத்தில் புதிய படம் உள்ளிட்ட சில திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதற்கு அடுத்தபடியாக, ஜெயம் ரவி நடிக்கவுள்ள திரைப்படத்தை அறிமுக இயக்குனர் ஆண்டனி என்பவர் இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜோடி சேரும் கீர்த்தி சுரேஷ்?
இந்த திரைப்படத்தினை ஹோம் மூவி மேக்கர்ஸ் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரிக்கவுள்ள நிலையில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் இணையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது. ஏற்கனவே, ராஜேஷ் - ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் வலம் வந்தது.
அந்த வகையில், தற்போது அறிமுக இயக்குனரின் படத்திலும், ஜெயம் ரவி மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் ஜோடி சேரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.