'அடங்க மறு' படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு பிறகு ஜெயம் ரவி ஹீரோவாக நடித்துள்ள படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பாக ஐசரி கே.கணேஷ் இந்த படத்தை தயாரித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கும் இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். மேலும் சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஷாரா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த படம் சுதந்திர தினத்தை முன்னிட்டு வருகிற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்த படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. இந்த டிரெய்லரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அரசியல் பேச்சு இடம் பெற்றிருந்தது.
அந்த காட்சிம் பெரும் விமர்சனத்துக்குள்ளானது. மேலும், நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசனும் தயாரிப்பாளரை அழைத்து அந்த காட்சியை நீக்க சொன்னதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷும் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனும் பேசிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் தயாரிப்பாளர் ஐசரி கே.கணேஷ் பேசும் போது, ''நாங்கள் ரஜினி காந்தின் தீவிர ரசிகர்கள். நான் சூப்பர் ஸ்டாரின் 2.0 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தேன்.
ரஜினி ரசிகர்கள் இந்த படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்'' என்றார். பின்னர் இந்த படத்தின் இயக்குநர் பிரதீப், ரஜினி சார் ரசிகர்கள் ஹேப்பியாகுற மாதிரி அந்த காட்சியை நான் மாற்ற போகிறேன் என்றார்.