ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியை கடந்த 5 சீசனாக, நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.
பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாக இருக்கும் நபர்கள், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நடக்கும் சவால்கள், சண்டை, கலகலப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் தான் மக்கள் மத்தியிலும் அதிகம் பேசுபொருளாக இருக்கும்.
கடைசியாக நடைபெற்ற பிக்பாஸ் ஐந்தாவது சீசனில், ராஜு வெற்றியாளராக அறிவிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், தற்போது பிக்பாஸ் ஆறாவது சீசன் ஆரம்பமாகி உள்ளது. இதில், பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் நபர்களும் புதிய சீசனில் போட்டியாளர்களாக களமிறங்கி உள்ளனர்.
அந்த வகையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், யூடியூபர் ஜி.பி.முத்து, இசைக் கலைஞரான அசல் கோலார், சீரியல் நடிகர் அசீம், திருநங்கை ஷிவின் கணேசன், டான்ஸ் மாஸ்டர் ராபர்ட், மாடல் ஷெரினா, கிரிக்கெட் வீரர் ராம் ராமசாமி, ராப் சிங்கரான ஆர்யன் தினேஷ் (ADK), தொகுப்பாளினி ஜனனி, KPY அமுதவாணன், VJ மகேஸ்வரி, VJ கதிரவன், சத்யா சீரியல் நடிகை ஆயிஷா, ஈரோடு டிக்டாக் பிரபலம் தனலட்சுமி, நடிகை ரச்சிதா மகாலட்சுமி, ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரரான மணிகண்டன் ராஜேஷ், மெட்டி ஒலி ஷாந்தி அரவிந்த், VJ விக்ரமன், மாடல் குயின்சி ஸ்டான்லி, சிங்கப்பூர் மாடல் நிவாஷினி உள்ளிட்ட 20 நபர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
இதனிடையே ஒருவாரம் கிளப் ஹவுஸ் டாஸ்க், நடந்து வந்தது. அதன்படி பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்கள் அறிமுகம் ஆகிக் கொண்டனர். அணிகளாக பிரிந்து வீட்டின் வேலைகளை செய்தனர். அதற்கான அதிகாரப் பகிர்வும், அதிகாரப்பிரிவுகளும் அரங்கேறின. சிறு சிறு மனஸ்தாபங்கள் தொடங்கி, பெரு வெடிப்புகளும், பிரச்சனைகளும், சண்டைகளும் , சச்சரவுகளும் என ஏறக்குறைய 40 வது நாள் நடக்கவேண்டியவை எல்லாம் கூட முதல் வாரத்திலேயே நிகழ்ந்துவிட்டது. அக்டோபர் 9-ஆம் தேதி ஒளிபரப்பாக தொடங்கிய பிக்பாஸின் முதல் வார இறுதியான இந்த வார இறுதியில், நடிகர் கமல்ஹாசன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸ்களிடம் அகம் டிவி வழியே பேசினார்.
முன்னதாக ஜிபி முத்துவுடனான பிரச்சனை குறித்து அனைவர் முன்னிலையிலும் தனலட்சுமியிடம் பேசியிருந்த ஜனனி, "ஜிபி முத்து எகிறிக் கொண்டு வந்ததாக நீ கூறுகிறாய். ஆனால், நீ திருப்பி பேசிய விதம் தவறு. வயதுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம் என நான் உன்னிடம் கூறிய போது, நீ பிக்பாஸ் வீட்டிற்கு வந்தேன் என குறிப்பிட்டாய். ஆனால், பிக்பாஸ் வீடு என்றால் அம்மா, அப்பா, அக்கா என இது ஒரு வீடு மாதிரி. இங்கே நீ அனைவரையும் வயதுக்கு ஏற்ற மாதிரி பார்க்க வேண்டும். அனைவரையும் ஒரே நிலையில் எடுத்துக் கொள்ள இது ஒன்றும் ரீல்ஸ் கிடையாது. அவருடைய வயதுக்கு அவர் எகிறினார் என்றால் அவர் எங்களுக்கு அப்பா மாதிரி தான். அவரே ஒரு இடத்தில் கோபப்பட்டால் கூட, நீ பொறுமையாக போயிருக்க வேண்டும்.
உன்னை விட வயது குறைவான நான் தலைவராக இருந்து ஒரு வேலையை உன்னிடம் சொல்லும் போது எதிர்த்து பேசவும் வாய்ப்புண்டு. நீ நடந்த விதம் எனக்கு பிடிக்கவில்லை" என குறிப்பிட்டிருந்தார். அதன் பின்னர் தனலட்சுமி உடனே அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்.
இந்நிகழ்ச்சியில் ஜனனியிடம் தனலட்சுமி விவகாரம் குறித்து கமல் பேசியிருந்தார். அப்போது, ஜனனியோ, “நான் ரீல்ஸ் என்பதை இயல்பாகவே குறிப்பிட்டேன். அவர் ரீல்ஸ் பண்ணுவதே எனக்கு தெரியாது. நானும் கூட ரீல்ஸ் பண்ணுவேன். ஆனால் அவர்கள் பண்ணுவது போல் அல்ல. வீடியோவை இன்ஸ்டாவில் போடுவேன். ஆனால் அவருடைய ரீல்ஸ் குறித்தது அல்ல என்னுடைய கமெண்ட். நான் சொன்னது இங்கு நாம் ரீல்ஸ் பண்ணுவோமே அப்படி அல்ல - எல்லாரும் ஒரே வயதுடையவர்களாக இருக்க.. என்பதையே நான் சொன்னேன்” என விளக்கியிருந்தார். அதன் பின் பேசிய கமல், “எங்களுக்கு விளங்கிருச்சு.. இதை தனலட்சுமியிடமே விளக்கலாமே” என்று குறிப்பிட்டார்.