நடிகர் ஜெய் நடிப்பில் சூப்பர் ஹீரோ ஜானரில் உருவாகி வரும் 'பிரேக்கிங் நியூஸ்' திரைப்படத்தில் சர்வதேச தரத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெறவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
திருக்கடல் உதயம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக அதிக பொருட் செலவில் உருவாகி வரும் இப்படத்தில் 100 நிமிடங்களுக்கு சர்வதேச தரத்திலான விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அமையும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. ‘சிவாஜி’, ‘அந்நியன்’, ‘முதல்வன்’ உள்ளிட்ட திரைப்படங்களின் விஷுவல் எஃபெக்ட்ஸ் டீமில் பணியாற்றிய ஆண்ட்ரூ பாண்டியன் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி வருகிறார்.
இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக புதுமுக நடிகை பானு நடிக்கிறார். ஸ்டைலிஷ் வில்லன்களாக தேவ் ஹில் மற்றும் ராகுல் தேவ் நடித்துள்ளனர். மேலும், ஜெயப்பிரகாஷ், இந்திரஜா, சந்தனா பாரதி, மோகன் ராம், பழ.கருப்பையா, பி.எல்.தேனப்பன், மானஸ்வி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
‘பிரேக்கிங் நியூஸ்’ படத்தில் வழக்கமான கிராபிக்ஸ் காட்சிகள் அல்லாமல், நேரடியாக நிஜமான ஷூட்டிங் தளங்களுக்கு சென்று, அங்கு பிரம்மாண்ட செட் அமைத்து ஷூட்டிங் நடத்தி வருகின்றனர். இப்படத்தில் யாரும் எதிர்ப்பார்க்காத அளவிற்கு விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிகள் அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் வெகுவாக பாராட்டப்படும் ஜானி லால் ஒளிப்பதிவு செய்ய, விஷால் பீட்டர் இசையமைக்கிறார். ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்க, விஷுவல் எஃபெக்ட்ஸ் பணிகளை தினேஷ் குமார் கையாளுகிறார்.