பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5வது சீசன் அக்டோபர் 3-ஆம் தேதி மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாகத் தொடங்கியது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் அறிமுகமான முதல் போட்டியாளர் இசைவாணி.
இவர் 'பிபிசி'-யின் '2020 ஆம் ஆண்டுக்கான 100 சிறந்த பெண்கள்' பட்டியலில் இடம் பிடித்த ஒரே தமிழ்ப் பெண். கடந்த 2017 ஆம் ஆண்டு இயக்குநர் பா.ரஞ்சித் நீலம் பண்பாட்டு மையத்தின் மூலம் தொடங்கிய 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்' இசைக்குழுவில் இருக்கும் 20 ஆடவர் பாடகர்களில் ஒரே பெண் கானா பாடகர் இசைவாணி.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூட, தனக்கே உரிய சமூக விழிப்புணர்வுடன் டைமிங், ரைமிங்கோடு கூடிய துள்ளலான கானா பாடலை பாடி அறிமுகமான இசைவாணி தமது இந்த பாடல் வாழ்வு குறித்து கமல்ஹாசனிடம் பகிர்ந்துகொண்டார்.
அப்போது, தனது தந்தை இறப்பு வீடுகளில் பாடிக்கொண்டிருந்ததாகவும் ஆனாலும் பல இடங்களில் அவரது தந்தைக்கு பாடும் வாய்ப்பு தரப்படாமல் புறக்கணிப்புகள் நிகழ்ந்ததாகவும் கூறியுள்ளார். மேலும் தான் பிறந்தவுடனேயே தனக்கு இசைவாணி என தனது பெற்றோர் பெயர் வைத்துவிட்டதாகக் கூறும் இசைவாணி, தமது தந்தை புறக்கணிக்கப்பட்ட இடங்களில் தற்போது தான் மேடையேறி பாடுவதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் தனக்கும் தற்போது வரை அப்படியான ஒதுக்கப்படும் புறக்கணிப்புகள் நிகழ்த்தப்படுவதாகவும் இசைவாணி தெரிவித்துள்ளார். குறிப்பாக ஒரு சில இடத்தில் பாடச் சென்றபோது, தான் மட்டும் ஒரே ஒரு பெண் கானா பாடகர் என்பதால், தனக்கு மட்டும் கடைசியாகவே, பாடுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டதாக கூறும் இசைவாணி, அவ்வாறு தன்னை கடைசியாக பாடவிடும்போது தானும் சரி, ஆடியன்சும் சரி களையிழந்து விடக்கூடிய சூழல் இருப்பதாகவும் கூறினார். எனினும் அப்போதும் காத்திருந்து தான் யாரென தன் பாடலில் காட்டிவிட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பிபிசி தந்த அங்கீகாரம், மீடியா வெளிச்சம் உள்ளிட்டவற்றால் தற்போது தமக்கான வாய்ப்புகள் முறையாகக் கிடைக்கப் பெறுவதாகவும் தெரிவித்துள்ளார்.