நம்மூர் பாண்டிச்சேரியை கதைக்களமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட Life of Pi படத்தை பலரும் பார்த்திருப்போம். ஆஸ்கார் மேடை வரை சென்றெட்டிய அந்த படத்தில் ஹீரோவாக நடித்தவர் இர்ஃபான் கான். சலாம் பாம்பே இந்தி திரைப்படம் மூலம் திரையுலகில் கால் பதித்த அவருக்கும் முதல் படத்திலேயே சிறந்த நடிகருக்கான ஆஸ்கார் பரிந்துரை கிடைத்தது.
தொடர்ந்து விமர்சன ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்துவந்த அவருக்கு ஹாலிவுட்டிலும், பிரிட்டன் திரைப்படங்களிலும் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. 2012ம் ஆண்டு ‘பான் சிங் தோமர்’ படத்தில் நடித்த அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. மேலும் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ-யையும் வென்றுள்ளார்.
இந்நிலையில், இர்ஃபான் கானின் தாயார் சாயிதா பேகம் சனிக்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார் என்று செய்தி வெளியானது. எண்டி டிவி வெளியிட்டுள்ள செய்தியில் ஜெய்பூரில் இர்ஃபான் கானின் தாயாரின் இறுதிச்சடங்கு நடைபெற்றதாகவும், லாக் டவுனால் மும்பையில் இருந்து இர்ஃபான் கானால் இறுதி சடங்கில் கலந்து கொள்ள முடியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரமான சம்பவம் இர்ஃபான் கானின் ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ரசிகர்களும் திரையுலகினரும் அவர் தாயின் இழப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.