இரண்டாம் குத்து இயக்குநர் சந்தோஷ் ஜெயகுமார் ஒரு முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
சந்தோஷ் ஜெயகுமார் இயக்கத்தில் வெளியாகவுள்ள திரைப்படம் இரண்டாம் குத்து. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் அடுத்தப்பாகமாக இது உருவாகவுள்ளது. இத்திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இதற்கு இயக்குநர் பாரதிராஜா கடுமையான கண்டனத்தை முன் வைத்தார்.
இதை தொடர்ந்து இயக்குநர் சந்தோஷ் பாரதிராஜாவின் கருத்துக்கு பதிலாக, ஒரு ட்வீட் செய்தார். இந்த ட்வீட் இணையத்தில் பரபரப்பையும் விவாதங்களையும் கிளப்பியுள்ளது. இந்நிலையில் தற்போது இயக்குநர் சந்தோஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறியதாவது, ''இரண்டாம் குத்து படத்தை இயக்கி, நடித்துள்ளேன். அதன் போஸ்டர்கள், டீசருக்கு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அந்த அறிக்கையை படித்துவிட்டு வந்த கனத்தின் வெப்பத்தில், எனது ட்விட்டர் பதிவில் ஒரு ட்வீட் போட்டுவிட்டேன். அது அவசரத்தில் என்ன செய்கிறோம் என்று தெரியாமல் செய்தது. அதற்கு பிறகு நாம் அவசரத்தில் இதை செய்திருக்க கூடாது என்று மனம் கூறியது. ஆகவே, நான் போட்ட ட்வீட்டிற்கு வருத்தம் தெரிவிக்கிறேன்.
தமிழ்த் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா அவர்கள், அவருடைய சாதனைகளில் ஒரு சதவீதமாவது நாம் செய்துவிட மாட்டோமா என்று பலரும் பணிபுரிந்து வருகிறார்கள். பல்வேறு இயக்குநர்களுக்கு இயக்குநர் பாரதிராஜா அவர்கள் வழிகாட்டியாக இருந்திருக்கிறார். இருக்கிறார். எப்போதும் இருப்பார். அவருடைய அறிக்கைக்கு நான் அவ்வாறு எதிர்வினையாற்றி இருக்கக்கூடாது.
இதற்கு அடுத்து வரும் போஸ்டர்கள், அனைத்து தரப்பு மக்களும் பார்க்கும் வகையில் இருக்கும் என்று உறுதியளிக்கிறேன்'' என அவர் தெரிவித்துள்ளார்.