80 மற்றும் 90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் கொடிகட்டி பறந்தவர் நடிகை சில்க் ஸ்மிதா. திடீரென கடந்த 1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி தற்கொலை செய்துகொண்டார்.
இன்று அவரது நினைவு தினம் என்பதால் ரசிகர்கள் அவர் குறித்த நினைவுகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர். நடிகை சில்க் ஸ்மிதாவின் வீட்டிற்கு அருகில் வசித்த சாரு ஶ்ரீ என்பர் அவர் குறித்த கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.
அதில், ''நடிகை சில்க் ஸ்மிதா, எங்க வீட்டருகில் அரண்மனை மாதிரி இருக்கும் ஒரு வீட்டுக்கு குடி வந்தார். நாங்கள் இருந்தது கோடாம்பாக்கம் என்பதால் திரையுலகினர் நிறைய பேர் எங்கள் வீட்டின் அருகில் இருந்தனர். எல்லோர் மாதிரியும் இல்லாமல் சில்க் ஸ்மிதா மிகவும் தனிமையாக , எந்த பிரச்சனையிலும் தலையிடாமல் இருந்தார். தினமும் இரவு நாயுடன் வாக்கிங், அல்லது சைக்கிளிங் செல்வார்.
தெருவில் இருந்த விநாயகர் ஆலயத்திற்கு சென்று காணிக்கை செலுத்துவார். அவரிடம் நிறைய பேர் உதவி கேட்டு வருவர். குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் நிறைய பேருக்கு அவர் உதவிகள் செய்திருக்கிறார். அப்படி உதவிகள் பெற்றவர்கள் அவர் குறித்து பெருமிதம் தெரிவிப்பார்கள். மேலும் ஆந்திராவில் இருந்து ஒரு பெண் நான் சினிமாவில் பெரிய நடிகையாக வேண்டும் என்ற கனவுடன் வந்தார். அவரை அழைத்து சமாதானம் தெரிவித்து பத்திரமாக வீட்டுக்கு அனுப்பி வைத்தார்'' என்று கூறப்பட்டுள்ளது.