கடந்த இரண்டு ஆண்டுகளாக உலக நாடுகள் அத்தனையும் கொரோனா பாதிப்பால் முடங்கி இருப்பதை நாம் அறிவோம். இதுவரை கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால் குறைந்தபட்சம் பாதுகாத்துக்கொள்ள தடுப்பூசி மூலம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் முனைப்பாக இருக்கிறது. அதன்படி இந்தியாவிலும் அனைத்து மக்களும் தடுப்பூசி போட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மக்களிடையே தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த அரசும் பல முயற்சிகளை எடுத்து வருகிறது.
அதேபோல திரைத்துறை பிரபலங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படங்களையும் வீடியோவையும் சமூக வலைதளங்களில் பதிவேற்றி வருகிறார்கள். சமீபத்தில் தடுப்பூசியை அச்ச உணர்வுடன் செலுத்திக்கொண்ட நடிகை ராய் லக்ஷ்மி, அந்த வீடியோவை தனது இன்ஸ்ட்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.
கடந்த 2005-ல் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான ராய் லக்ஷ்மி, 'வெள்ளித்திரை', 'தாம் தூம்', 'நான் அவனில்லை 2', 'பெங்களூர் நாட்கள்', போன்ற தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார். என்னதான் தைரியமான ஆளாக இருந்தாலும் ஊசி போடும்போது கொஞ்சம் பயம் இருக்கத்தானே செய்யும். அப்படித்தான் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட போது மிகவும் பயந்து போய் தனது கண்களை மூடிக்கொண்டுள்ளார் ராய் லக்ஷ்மி. ஊசி குத்தி முடித்தபோது அழும் நிலைமைக்குச் சென்றுள்ளார். இன்ஸ்ட்டாகிராமில் அந்த விடியோவைப் பகிர்ந்துள்ள ராய் லக்ஷ்மி,
"நிஜமாகவே ட்ரிபனோபோபியா (Trypanophobia) என்கிற ஊசி பயம் எனக்கு உண்டு. ஊசி செலுத்திக்கொள்வது எனக்கு சாதாரண விஷயமில்லை. ஆனாலும் இதைச் செய்துகொண்டேன். வீடியோவைப் பார்த்து யாரும் சிரிக்க வேண்டாம்". என வேண்டுகோள் விடுத்துள்ளார்.