நடிகர் விஜய் வீட்டில் சோதனை நடப்பதையடுத்து, அதுகுறித்து வருமான வரித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் விஜய். அண்மையில் அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படம் ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்பெற்றது. இந்த நிலையில் நேற்று பிகில் படத்தை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனத்திலும், ஃபைனான்சியர் அன்புசெழியனிடமும் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதை தொடர்ந்து, நெய்வேலியில் நடந்து கொண்டிருந்த விஜய்யின் மாஸ்டர் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு நேரடியாக சென்று, வருமான வரித்துறையினர் விஜய்க்கு சம்மன் வழங்கினர். இதையடுத்து விஜய் நெய்வேலியில் இருந்து சென்னை புறப்பட்டார்.
இந்நிலையில் இன்று காலையில் இருந்து விஜய் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதையடுத்து வருமான வரித்துறையினர் தற்போது வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்றிலிருந்து நடைப்பெற்ற சோதனையில் ஃபைனான்சியர் இடமிருந்து 77 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் சொத்து பத்திரங்கள், அடமான பத்திரங்கள், காசோலைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்திருக்கிறோம். இந்த விவகாரத்தில் 300 கோடி ரூபாய் அளவில் வரிஏய்ப்பு செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிகிறது.
தேடப்பட்ட குழுவின் ஒரு பகுதியாக இருக்கும் விநியோகஸ்தர் ஒரு பில்டர் ஆவார். விநியோகஸ்தருக்கு சொந்தமான அனைத்து ஆவணங்களும் அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் இருந்து மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்களின் ஆய்வு நடந்து வருகிறது
மேலும் தயாரிப்பு நிறுவனத்தின் ரிசிப்டுகள், நடிகர்களுக்கு கொடுத்த சம்பளம், மற்ற செலவுகள் குறித்தும் விசாரணை தொடர்ந்து வருகிறது. நடிகர் வீட்டில் நடந்த சோதனையில், அவர் சொத்துக்களில் செய்த முதலீடு பற்றியும், தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து வாங்கிய சம்பளம் ஆகியவற்றையும் விசாரணைக்கு உட்படுத்தியுள்ளோம். மேலும் வருமான வரித்துறையினரின் சோதனை அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சில இடங்களில் தொடர்ந்து வருகிறது' என தெரிவித்துள்ளனர்.