பிக் பாஸ் வீட்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய டாஸ்க்கின் படி போட்டியாளர்கள் அனைவரும் குழுவாகப் பிரிந்து கட்சிகள், கட்சியின் பெயர்கள், கட்சி கொடிகள் உள்ளிட்டவற்றை அறிவித்து அவற்றின் கொள்கைகளை வகுக்க வேண்டும்.
இதை செய்த பிறகு முதல் அங்கமாக போட்டியாளர்களிடையே தங்களுடைய கட்சிகளின் கொடியை நாட்டக்கூடிய டாஸ்க் அறிவிக்கப்பட்டது. இதில் அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்த தனித்தனி குழுவினரும் தங்கள் கட்சி கொடிகளை நிலைநாட்டுவதற்கு போட்டியாளர்களுடன் இடித்தும் தள்ளுமுள்ளு செய்தும் விளையாட்டில் ஈடுபட்டனர்.
இதில் வெற்றி பெற, ஒலி அடித்ததும், ஓரிடத்தில் இருந்த பைப் முனையில் கட்சி கொடிகளை சொருகி கொடிநாட்ட வேண்டும். இதில் தாமரை மற்றும் இமான் இருவரும் ஒரே பைப் முனையில் தங்களுடைய கட்சி கொடிகளை நாட்டுவதற்கு முயற்சித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் முதலில் தாமரைதான் கொடியை நட்டார் என்றாலும், நடந்த தள்ளுமுள்ளு மற்றும் மோதலில் அந்த பைப் உடைந்து போக, பின்னர் அதை பலவந்தமாக தாமரையிடம் இருந்து பிடுங்கி இமான் கொடியை சொருகி நாட்டினார். இமான் தாமரையிடமிருந்து பைப்பை பிடுங்கும் போது தாமரையும் வலுவாக பிடித்திருந்தார்.
இதனால் இவர்கள் இருவரிடையே நீண்ட போராட்டம் நீடித்தது. இறுதியில் இமான் செய்தது நியாயமில்லை என்று தாமரை கூற, “இமானும் தாமரையை காயப்படுத்தும் நோக்கம் இல்லை, இது விளையாட்டுதான்!” என தெரிவித்திருந்தார். இதற்கு தாமரை, “விளையாட்டு என்று சொல்லாதீர்கள், காயப்படுத்தும் நோக்கம் இல்லை என்றும் சொல்லாதீர்கள், உங்கள் அணிக்காக விளையாடுகிறீர் என்று சொல்லுங்கள், அதை வேண்டுமானால் ஏற்றுக் கொள்கிறேன்!” என்று பேசி விட்டுச் சென்றுவிட்டார்.
அதன் பின்னர் இமானிடம் பேசிய அமீர், “நீங்கள் தாமரையிடம் அவ்வாறு நடந்துகொண்டது தவறு.. எனக்கு அப்படித்தான் பட்டது.. உங்களிடத்தில் வேறு யாரேனும் இருந்திருந்தால் தாமரை இப்படி சமாதானமாகப் போய் இருக்க மாட்டார். நீங்களும் தாமரைக்கு பதில் வேறு யாராவது இருந்திருந்தால் இந்த சண்டையை இத்தோடு விட்டு இருக்க மாட்டீர்கள்!” என்று குறிப்பிட்டார்.