பிக்பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் அனைவருமே குழுக்களாக பிரிந்து, கட்சிகளைத் தொடங்கி, அவற்றுக்கு பெயர், கொள்கைகள் உள்ளிட்டவற்றை அறிவித்துள்ளதுடன்ம் அவற்றின் கொடிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி பிக்பாஸ் MK (மக்கள் குரல்) கட்சியை சிபி, ராஜூ, தாமரை, நிரூப் உள்ளிட்டோரின் அணி அறிமுகப்படுத்தியது. இதன் தலைவர் சிபி பேசும்போது, தங்கள் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் ராஜூ என்றும், மகளிரணித் தலைவர் தாமரைச் செல்வி என்றும் குறிப்பிட்டார்.
மேலும் நீதி, நேர்மை, நியாயம் ஆகியவை தங்கள் கட்சியின் கொள்கை என்றும் உணவு உள்ளிட்டவை கவனிக்கப்படுதல், பிக்பாஸ் விதிமுறை பின்பற்றப்படுதல், நடுநிலை முடிவுகள் எடுக்கப்படுதல், போட்டியாளர்களின் திறமைகள் அங்கீகரிக்கப்படுதல், மகளிர் நலம் மேம்படுத்தப்படுதல் உள்ளிட்ட விஷயங்களுக்கு தங்கள் கட்சி முன்னுரிமை கொடுக்கும் என்றும் கூறினார். இந்த கட்சியின் கொடியாக ஸ்டார் கொடியை அறிமுகப்படுத்தினார்.
அடுத்து வந்த சஞ்சீவ் தங்கள் கட்சிக்கு பெயர் NNP என்றும் ஆனால் அதற்கான விளக்கம் தெரியாது என்றும் கூறியவர், தங்கள் கட்சியின் சின்னம் நெற்றிக்கண் என்றும், ‘நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே’ என்பதே தங்கள் கட்சியின் கொள்கை என்றும் கூறியதுடன், ‘உறக்கத்தை பின்னிறுத்தி உற்சாகத்தை முன்னிறுத்துவோம்.. நாமினேஷனில் வறுத்தெடுப்போம்’ என்றும் தெரிவித்திருந்தார்.
இதேபோல் உரக்க சொல் எனும் கட்சியை பிரியங்கா தலைமையில் அபினய், பாவனி, அமீர் உள்ளிட்டோர் இருக்கின்றனர். உண்மையை சொல் - அதை நேர்பட சொல், அநீதியை சொல் - அச்சமின்றி சொல், நாம் என்று சொல் - சமமாக சொல் ஆகியவைதான் இந்த கட்சியின் கொள்கைகள் என்றும், ஒழுக்கம் திட்டம், சுயவேலை திட்டம், ஒற்றுமை திட்டம், வீடு தூய்மையாக இருப்பதற்கான திட்டம் உள்ளிட்டவற்றை பிரதானமாக தங்கள் கட்சி கொண்டிருப்பதாக பிரியங்கா ஏற்கனவே அறிவித்திருந்தார்.
இந்நிலையில் 2 நாட்களாக கட்சிக் கொடிகளை நாட்டும் போட்டிகள் நடத்தப்பட்டு வந்தன. மேலும் தங்கள் கட்சிக் கொள்கைகளை கோஷங்களாகவும் வெளியிட்டு வந்தனர். அந்த வகையில் ராஜூவை ஒரு விமர்சனத்தை சொல்வதாக கூறி தனியே அழைத்துச் சென்ற இமான் அண்ணாச்சி, பிரியங்காவின் உரக்கச் சொல் கட்சியின் வாசகத்தை காட்டி, “உங்கள் ஓட்டு உரக்கச் சொல் கட்சிகே” என்று எழுதியதை காட்டு ராஜூவுக்கு ஒன்றும் புரியவில்லை. அதன் பின்னர் இமான் அண்ணாச்சி, ‘கட்சிகே’ என எழுதப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி, ‘ஹே’ எனும் வடமொழி உச்சரிப்பு வருவதைக் குறிப்பிட, அப்போது ராஜூ புரிந்துகொண்டு ஷாக் ஆனார். சரியாக நோட் பண்ணிட்டீங்க என்று சொல்லி இமானுக்கு கை கொடுத்தார்.