நடிகர் திலகம் சிவாஜி கணேசன், 1952ல் பராசக்தி படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் 288 படங்களில் நடித்து நடிப்பு என்பதற்கு தனி இலக்கணமாகவே திகழ்ந்து அழியா புகழ் பெற்றவர். இன்றும் சிவாஜி நடிப்புக்கு நிகர் இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடித்த சிவாஜி கணேசனின் மகன்களுள் ஒருவர் நடிகர் பிரபு, பிரபவின் மகன் விக்ரம் பிரபு.
இந்நிலையில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் குறித்த நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இந்நிகழ்வில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் இளையராஜா, பிரபு, விக்ரம் பிரபு, கவிஞர் முத்துலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் பேசிய இசைஞானி இளையராஜா, “சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் அவரவர் பெயர் எழுதியிருப்பதாக சொல்வது போலவே, நடிகர்கள் சாப்பிடும் ஒவ்வொரு அரிசியிலும் சிவாஜி கணேசனின் பெயர் இருக்கிறது என நினைத்துக் கொள்ளுங்கள்.
ஒருமுறை அண்ணன் சிவாஜி கணேசனுக்கு குதிரையில் அவர் அமர்ந்திருப்பது போல் வெள்ளி சிலை பரிசளிக்க கேட்டார்கள். அதற்கு ரஜினி, கமல் என பலரிடமும் குறிப்பிட்ட தொகையை கலெக்ட் செய்வதாக சொன்னார்கள். அதற்கு நான் மொத்த தொகையையும் கொடுத்துவிடுகிறேன். வேறு ஒருவருடைய பெயரும் அதில் இருக்க கூடாது என கூறி மொத்த தொகையையும் கொடுத்தேன். அது சிவாஜி அண்ணாவுக்கும் அவரது குடும்பத்துக்கும் தெரியும். யாரை மறந்தாலும் மறக்கலாம், இளையராஜாவை மறக்க கூடாது என சிவாஜி அண்ணா சொன்னார். அந்த வார்த்தை எவ்வளவு சத்தியம். எவ்வளவு பெரிய விஷயம்.
எனவேதான், அந்த சிலைக்கான நிதிப்பெயர்களில் வேறு ஒருவருடைய பெயரும் இருக்க கூடாது என கூறி மொத்த தொகையையும் கொடுத்தேன். இதை, நான் காசு கொடுத்தேன் என தம்பட்டம் அடிப்பதற்காக சொல்லவில்லை. அவருக்கு திரை உலகில் செய்ய வேண்டிய மரியாதையை யாரும் செய்யவில்லை, அரசுகளும் செய்யவில்லை. ஆனால் தனிப்பட்ட ஒருவன் செய்துவிட்டான் என்றால் அது இளையராஜா ஒருவன் தான்” என தழதழுத்த குரலில் தெரிவித்தார்.
Also Read | “உன்ன பத்தி நிறைய சொல்றாங்களே.. சொல்றவங்க கதையெல்லாம் நம்பாதீங்க அண்ணா” - இளையராஜா..!