இளையராஜாவுக்கும் பிரசாத் ஸ்டுடியோவுக்கும் நிலவி வந்த கருத்து வேறுபாட்டில் முக்கிய முடிவுகள் இன்று வெளியாகின.
தமிழ் சினிமாவில் இசைஞானி என புகழப்படும் இசையமைப்பாளர் இளையராஜா. இவர் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் உள்ள அரங்கை 40 வருடங்களுக்கு மேல் ஒலிப்பதிவு கூடமாக பயன்படுத்தி வந்தார். இதையடுத்து இடத்தை காலி செய்வதில் இருதரப்புக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில் இன்று உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது பிரசாத் ஸ்டுடியோவின் தரப்பில், நிபந்தனைகளுடன் பிரசாத் ஸ்டுடியோவுக்குள் இளையராஜாவை அனுமதிக்க தயார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் 50 லட்சம் இழப்பீடு கேட்டு, தங்களுக்கு எதிராக தொடர்ந்த வழக்கு மற்றும் கிரிமினல் வழக்குகளை வாபஸ் பெற வேண்டும். பிரசாத் ஸ்டுடியோவுக்கு சொந்தமான நிலத்தை உரிமை கோர கூடாது. ஒரு உதவியாளர், ஒரு இசைக்கலைஞர் மற்றும் வழக்கறிஞர் மட்டுமே உடன் வர வேண்டும்.
இந்த நிபந்தனைகளை ஏற்று இன்று மாலைக்குள் தனது கைப்பட இளையராஜா நீதிமன்றத்தில் உத்திரவாத மனு தாக்கல் செய்தால் அனுமதிப்போம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விசாரணையை புதன்கிழமைக்கும் ஒத்திவைத்து உத்தரவிட்டார் நீதிபதி.