தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. இசையமைப்பாளர் இளையராஜாவின் மகனான யுவன் ஷங்கர் ராஜாவின் இசைக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
Also Read | "இளையராஜா பாட்ட கேட்டு கண்ணீர் விட்டு அழுதுட்டேன்!" - பா.ரஞ்சித் Emotional பேச்சு.!
குறிப்பாக 90ஸ் கிட்ஸ்க்கு யுவனின் இசை மிகப்பெரிய ஹீலிங், தெராபி என்று குறிப்பிடும் ரசிகர்களும் உள்ளனர். யுவன் ஷங்கர் ராஜாவின் கலெக்ஷன்ஸ், ஆன் ரிப்பீட் மோடில் கேட்கும் தீவிர ரசிகர்கள் பலரும் உள்ளனர். தமிழ், இந்தி உட்பட பல மொழிகளில் இசையமைத்துள்ள யுவன் ஷங்கர் ராஜா முன்னணி இயக்குநர்கள் மற்றும் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்தவர்.
இசையமைப்பாளராக மட்டுமல்லாமல், தயாரிப்பாளராகவும் விளங்கும் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு இன்று (ஆகஸ்டு 31) பிறந்த தினம். இதனை ரசிகர்கள் ஒருபுறம் கொண்டாட, இன்னொருபுறம் யுவன் ஷங்கர் ராஜா பிறக்கும்போது உண்டான அனுபவத்தை குறித்து இளையராஜா நெகிழ்ச்சியுடன் பேசி வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.
அதில், “ஒரு காலகட்டத்தில் ஆழியார் டேமிற்கு சென்று நிறைய திரைப்படங்களை படமாக்குவது என்பது வழக்கமாக இருந்தது. ஆழியார் டேம் சென்று அங்கு சில கெஸ்ட் ஹவுஸ்களில் தங்கி கொண்டு திரைப்படம் எடுப்பார்கள். அங்கு இரண்டு மூன்று நாட்கள் தங்கி மியூசிக் கம்போஸ் செய்வது உண்டு. அப்படி ஒரு கம்போசிங் நேரத்தில் இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கே.ஆர்.ஜி அழைத்து இருந்தார்கள் . நான் அப்போது என்னுடைய குழுக்களுடன் அங்கு சென்றேன். அப்போதெல்லாம் நான் எங்கு சென்றாலும் என்னுடன் பக்கவாத்தியம் வாசிக்கக்கூடிய குழுவினர் வருவார்கள். அப்படி அங்கு சென்று தினம் அமர்ந்து கம்போசிங் செய்து கொண்டிருக்கிறோம். அப்போது தயாரிப்பாளர் கே.ஆர்.ஜியின் வீடு கோயம்புத்தூரில் இருந்ததால் அங்கு அடிக்கடி சென்று வருவார்.
அப்படி அவர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும் திரும்பி வந்து சந்திக்கும் போது, “டேய் உன் மனைவிக்கு டெலிவரி ஆகிவிட்டதாம்.. பையன் பிறந்திருக்கான்” என்று தகவல் சொன்னார். அவர் சொன்னவுடன் எனக்கு சந்தோஷமாக இருந்தது. நான் பாருங்கள் மனைவியின் டெலிவரி நேரத்தில் கூட, நான் கம்போசிங் பண்ற சூழலில் தான் இருந்திருக்கிறேனே தவிர, அவங்களை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதெல்லாம் இல்லை. அவர்களும் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கே.ஆர்.ஜி வந்து இந்த தகவல் சொன்ன நேரத்தில் மிகவும் சந்தோஷமாக இருந்தது. அன்று கம்போஸ் செய்த பாடல் ஜானி படத்தில் இருந்து என்கிற ‘சென்யூரிட்டா .. ஐ லவ் யூ’ என்கிற பாடல். படத்தின் பெயர் ஜானி. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படம். அந்த நேரத்தில் பிறந்த அந்த மகன் வேறு யாரும் அல்ல, அது தான் யுவன் .. ஹாப்பி பர்த்டே யுவன்!” என்று குறிப்பிட்டு இருக்கிறார். இவன் பிறந்ததற்கு பின்னால் இப்படி ஒரு சுவாரசியமான கதை, இளையராஜாவின் வாழ்க்கையில் இருந்திருக்கிறதா? அதும் ரஜினி பட பாட்டை கம்போஸ் செய்யும்போது யுவன் பிறந்திருக்கிறாரா? என்று ரசிகர்கள் இந்த வீடியோவை பகிர்வதுடன் யுவன் சங்கர் ராஜாவுக்கு தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
Also Read | “மீண்டும் Vijay-ஐ வைத்து படம் எடுக்கும் SAC..?” - அவரோட பதில் இதுதான்.. Exclusive பேட்டி.