Lata Mangeshkar, 06, பிப்ரவரி 2022:- பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் உடல்நிலை குறைவால் காலமாகியுள்ளார். இந்த துயர நிகழ்வு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லதா மங்கேஷ்கர்
தமிழில் வளையோசை கலகலவென, செண்பகமே செண்பகமே, ஓ பட்டர்ஃப்ளை உள்ளிட்ட பல பாடல்களை பாடியுள்ள மும்பையைச் சேர்ந்த பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர்.
சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ள் இவர், கடந்த 70 ஆண்டுகளாக தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் பாடி வந்தார். பல்வேறு முன்னணி இசையமைப்பாளர்களுக்கு இவர் பாடியுள்ள பாடல்கள் அனைத்துமே மக்கள் மத்தியில் பிரபலம். தமிழிலும் மேற்குறிப்பிட்ட ஏராளமான ஹிட் மற்றும் மனம் விரும்பும் மெலோடி பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.
தெய்வீக, காந்தர்வக் குரலால்
இந்நிலையில் இசைஞானி இளையராஜா, இசைக்குயில் லதா மங்கேஷ்கர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “திரைப்பட இசை உலக வரலாற்றில், 60 ஆண்டு 70 ஆண்டுகளுக்கும் மேலாக தம்முடைய தெய்வீக, காந்தர்வக் குரலால் உலக மக்களையெல்லாம் மயக்கி தன்வசத்தில் வைத்திருந்த மதிப்புக்குரிய லதா மங்கேஷ்கர் அவர்களின் மறைவு என்னுடைய மனதில் ஆழ்ந்த வேதனையை ஏற்படுத்தி இருக்கிறது.” என்று தெரிவித்துள்ளார்.
உலகத்துக்கே மாபெரும் இழப்பு
மேலும் பேசிய அவர், “இந்த வேதனையை எப்படி போக்குவது என்று எனக்கு தெரியவில்லை, லதா மங்கேஷ்கரின் இழப்பு இசை உலகத்துக்கு மட்டுமல்ல, இந்த உலகத்துக்கே மாபெரும் இழப்பு என்பதை குறிப்பிட விரும்புகிறேன். அவரை இழந்து தவிக்கும் அவரது குடும்பத்தாருக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து பேசிய இசைஞானி இளையராஜா, லதா மங்கேஷ்கரின் குடும்பத்தினரின் பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்திருக்கிறார்.